×

முதல் பருவ பாடங்களை முடிப்பதில் சிக்கல்... பள்ளி திறந்து 2 வாரம் கடந்தும் 3,4,5ம் வகுப்புகளுக்கு பாடபுத்தகம் இல்லை

நெல்லை: பள்ளிகள் திறக்கப்பட்டு 2 வாரங்கள் முடிந்த நிலையில் 3, 4, 5ம் வகுப்புகளுக்கு பாட புத்தகங்கள் தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணி நெல்லை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கல்வி மாவட்ட செயலாளர் சாம் மாணி க்கராஜ், மானூர் வட்டார செயலாளர் கிறிஸ்டோபர் மற்றும் நிர்வாகிகள் சரவணன், ஆல்பர்ட், ஐன்ஸ்டீன், முருகன் ஆகியோர் நெல்லை முதன்மை கல்வி அலுவலரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப் பட்டு இரண்டு வாரங்கள் நிறைவுபெற்று விட்டன. ஆனால் 3, 4, 5ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இதுவரை பாட புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

இதனால் ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் சிரமம் உள்ளது. முதல்பருவ பாட புத்தகங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற நிலை உள்ளதால் அரசும் கல்வித்துறையும் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அங்கன்வாடியுடன் இணைந்த அரசு மற்றும் ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் முன்பருவ வகுப்புகள் (எல்கேஜி, யுகேஜி) தொடங்க அந்தந்த ஒன்றியங்களில் உபரியாக உள்ள பணியில் இளைய ஆசிரியரை மாற்று பணிக்கு பணிநிரவல் செய்யுமாறு தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து எங்கள் கூட்டணியின் மாநில மையம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடை ஆணை வழங்கப்பட்டது. தமிழக அரசின் மேல்முறையீட்டால் தடை ஆணை விலக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து மீண்டும் இம்மாத தொடக்கத்தில் பணி நிரவல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் சில ஒன்றியங்களில் பணியில் இளையோரையும், வேறுசில ஒன்றியங்களில் மூத்தோரையும் அங்கன்வாடிகளில் பணிநிரவல் செய்துள்ளனர். பணிநிரவல் விதி மற்றும் அங்கன்வாடி உத்தரவில் ஒன்றிய அளவில் பணியில் உள்ள இளையோரை பணிநிரவல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே விதிகளின்படி அனைத்து ஒன்றியங்களிலும் இளைய ஆசிரியர்களையே பணிநிரவல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : school opening , Textbook
× RELATED பள்ளிகள் திறப்பு தற்போது...