×

இருட்டறையில் கிடக்கும் அறிவு பொக்கிஷங்கள்... அரசு நூலகங்களில் அடிப்படை வசதிகளுக்கு காத்திருக்கும் வாசகர்கள்

சேலம்: ஒரு நல்ல புத்தகம், ஆயிரம் நண்பர்களுக்கு சமம் என்பது அறிஞர்களின் மொழி. இயந்திரமயமாகி விட்ட வாழ்க்கைச்சூழலில் சிறந்த புத்தகங்களை தேடிப்பிடித்து வாசிக்கும் பழக்கம், இன்றைய இளைய தலைமுறையினரிடம் இருக்கிறதா? என்றால் அதற்கான விடை கேள்விக்குறி தான். அதே நேரத்தில் ஆர்வத்துடன் படிக்க வரும் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பாக இருப்பது அரசு நூலகங்கள். ஆனால் இந்த நூலகங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பெயரளவுக்கு மட்டுமே இருப்பது, வாசகர்களின் வருகைக்கு தடைபோடுகிறது.

மாவட்ட தலைநகரங்கள் மட்டுமில்லாமல் நகர்ப்புறங்கள், ஊரகப்பகுதிகளிலும் அரசு நூலங்கள் செயல்படுகின்றன். இந்த வகையில் சேலம் வின்சென்ட் சாலையில் 1953ம் ஆண்டு மாவட்ட மைய நூலகம் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் மைய நூலகம் 1, முழுநேர கிளை நூலகம் 16, கிளை நூலகம் 49, ஊர்ப்புற நூலகம் 78, பகுதி நேர நூலகம் 38, நடமாடும் நூலகம் 1 என 183 நூலகங்கள் செயல்படுகின்றன. சேலத்தில் உருவாக்கப்பட்ட மைய நூலகத்திற்கு தினமும் ஏராளமான மாணவர்கள், பெரியவர்கள் வந்து செல்கின்றனர். தரைத் தளத்தில் நாளிதழ்கள், வார இதழ்கள், நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், இலக்கிய நூல்கள் இடம் பெற்றுள்ளது. முதல் தளத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தங்கள் வைக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் மாவட்ட மைய நூலகத்திற்கு வந்து செல்கின்றனர். இங்கு வருபவர்கள் புத்தங்களை படிப்பதுடன் வீட்டிற்கும் எடுத்து செல்கின்றனர். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் ஆர்வமுடன் வந்து படித்து செல்கின்றனர். ஆனால் இப்படி வருபவர்களின் ஆர்வத்திற்கு அடிப்படை வசதிகள் இல்லாதது பெரும் தடையாக உள்ளது.

இது குறித்து நூலக புரவலர்கள் கூறுகையில், ‘‘மாவட்ட மைய நூலகத்தில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், 68 ஆயிரத்திற்கும் மேற்றபட்ட உறுப்பினர்களும், 400க்கும் மேற்பட்ட புரவலர்களும் உள்ளனர். ஒரு மாதத்திற்கு சாராசரியாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர் வந்து செல்கின்றனர். இதில் போட்டிக்கு தயாராகும் மாணவர்களே அதிகமாக வந்து செல்கின்றனர். இங்கு வருபவர்களுக்கு போதுமான வசதிகள் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் மாணவர்கள் படிப்பதற்கும் போதுமான வெளிச்சம் இல்லாததால் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மாவட்ட மைய நூலகத்தில் படிப்பதற்கு ஏராளமான புது நூல்கள் இருப்பதால் நாளுக்கு நாள் மாணவர்கள் வருகை அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போதைய காலகட்டத்தில் அரசாங்க குடிமைப்பணி தேர்வுக்கு மாணவர்கள் அதிகளவில் தயாராகின்றனர். மாணவர்களின் எண்ணிக்ைக நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் தான் உள்ளது. ஆனால் மாணவர்கள், பெரியவர்கள் படிப்பதற்கு போதிய இட வசதிகள், அடிப்படை வசதிகள் இல்லாதது வேதனைக்குரியது,’’ என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மாவட்ட மைய நூலகத்தில் மாணவர்கள் பயன் அடையும் வகையில் ஏராளமான வகை புது நூல்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஏற்ற நூல்கள் உள்ளது. நாளுக்கு நாள் மாணவர்கள் வருகை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் போதுமான வசதிகள் இல்லாதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் மாணவர்கள் படிப்தற்கு இட வசதிகள் அதிகமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது,’’ என்றனர்.

Tags : government libraries ,facilities , Government libraries
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...