×

கொட்டகையில் இருந்து தன்னம்பிக்கையுடன் கல்லூரியில் கால்பதித்த நாடோடி சமூக மாணவி

நாகர்கோவில்: நாடோடி சமூகத்தில் இருந்து படித்து தேறிய மாணவி பட்டப்படிப்பில் சேர கல்லூரியில் சேர்ந்தார். பாங்க் ஆபீசராக பணியாற்ற வேண்டும் என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள புளியமரத்தோப்பில் நாடோடி சமூகத்தை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக கூடாரம் அமைத்து வசிப்பது வழக்கம். இவ்வாறு 1996ல் சுரேஷ் -ஐயம்மாள் தம்பதியினர் துணிகளால் ஆன கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். இவர்களுக்கு கங்கா என்ற மகளும், முத்துசூரியா என்ற மகனும் உள்ளனர். தெரு தெருவாக சென்று குடைகள் சீர் செய்து தருதல், செருப்பு தைத்தல், பாசி மாலை செய்தல் இவர்களது தொழிலாக இருந்தது. தொழிலில் போதிய வருமானம் இல்லாத வேளையில் வீடு வீடாக சென்று உணவு பெற்று வாழ்க்கையை நடத்தி வந்தனர். குழந்தைகளும் அவர்களுடன் செல்வது வழக்கம். குழந்தைகள் நாடோடிகளாக சுற்றித்திரிந்ததை பார்த்த வெள்ளிச்சந்தை அரசு உயர்நிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பத்மதாஸ் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார். அப்போது கங்கா, அவரது சகோதரன் முத்துசூரியா மற்றும் அவர்களோடு சேர்ந்து வசித்து வந்த நாடோடி தம்பதிகளான வர்க்கீஸ் - ஈஸ்வரி ஆகியோரின் குழந்தைகள் முத்துமாரி, நீலாவதி, மாரிமுத்து என்று மொத்தம் ஐந்து நாடோடி சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் வெள்ளிச்சந்தை அரசு உயர்நிலை பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் முத்துசூரியா, கங்கா தவிர இதர மூன்று பேர் ஒரு சில வருடங்கள் பள்ளி சென்றுவிட்டு பின்னர் திடீரென்று நின்று விட்டனர். முத்துசூரியா, கங்கா தொடர்ந்து படித்து வந்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரான பத்மதாஸ் இந்த குழந்தைகளுக்கு தேவையான தொடர் உதவிகளை செய்து வந்தார். இருவரும் 10ம் வகுப்பு வரை வெள்ளிச்சந்தை அரசு உயர்நிலை பள்ளியில் படித்தனர். 10ம் வகுப்பு பொதுதேர்வுக்கு 4 மாதம் முன்னதாக தாயார் ஐயம்மாள் இறந்துவிட பின்னர் வகுப்புகளுக்கு சரியாக செல்லாத முத்துசூரியா தோல்வியடைந்தார். கங்கா 318 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள புதர்கள் நிறைந்த புளியந்தோட்டத்தில் பழைய துணிகள், பைகள் போன்றவற்றை கொண்டு அமைத்த கூடாரமே இவர்களது வீடாக இருந்தது. மழைக்காலங்களில் அருகே உள்ள கடை திண்ணைகளை தேடி ஓட வேண்டும். இந்த சூழலில் மாணவியை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து படிக்க வைக்க எண்ணி பத்மதாஸ், அவரை வெள்ளிமலை சுவாமி விவேகானந்தர் ஆசிரம தலைவர் சைதன்யானந்தஜி மகராஜ் வசம் அழைத்து சென்று அங்கிருந்து பின்னர் சிதறால் மலைக்கோயில் அருகே உள்ள அன்பு இல்லத்தில் சேர்த்தனர்.

அங்கிருந்து அருமனை அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 ல் அக்கவுண்டன்சி படித்து 463 மதிப்பெண்களுடன் கங்கா தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து கல்லூரியில் படித்து பட்டம் பெற ஆசைப்பட்ட கங்காவுக்கு அதற்கான வாய்ப்பும் கிடைத்தது. நாகர்கோவில் இந்து கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்துள்ள கங்கா கூறுகையில், ‘வசிக்க வீடு இல்லை, உடுத்திக்கொள்ள சுத்தமான ஆடைகள் இல்லை, நல்ல உணவு இல்லை, இருந்தாலும் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் எனக்கு இருந்தது. அதற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பத்மதாஸ் போன்றவர்கள் மிகுந்த உதவிகரமாக இருந்தனர். இப்போது கல்லூரியில் சேர்ந்துள்ளேன். எனக்கு பேங்க் வேலைக்கு போக வேண்டும், பாங்க் ஆபீசராக வேண்டும் என்பதே ஆசை. அதனால் பி.காம் சேர்ந்துள்ளேன். நல்லுள்ளம் படைத்தவர்கள் தொடர்ந்து உதவுவார்கள் என்று எண்ணுகிறேன்’ என்றார்.

விடுதியில் தங்கி படிக்க ஏற்பாடு

வெள்ளிச்சந்தை அரசு உயர்நிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பத்மதாஸ் கூறியதாவது: வெள்ளிச்சந்தை பகுதிகளில் சுற்றித்திரிந்த நாடோடி குழந்தைகளை படிக்க வைக்கும் எண்ணத்துடன் அவர்களை அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்துவிட்டேன். இங்குள்ள புளியந்தோப்பு பகுதியில்தான் அவர்கள் குடும்பமாக வசித்து வந்தனர். இப்போதும் அங்கு வசிக்கின்றனர். பள்ளியில் சேர்ந்த பின்னர் அவர்களும் மற்ற மாணவர்களுடன் அமர்ந்து படித்து வந்தனர். சிலர் தொடர்ந்து வகுப்புக்கு செல்லாமல் இடைநின்றனர். அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சித்தோம் பலன் இல்லை. அவர்கள் அப்போது ஊரைவிட்டே சென்று விட்டனர். மாணவி கங்காவும், அவரது சகோதரனும் தொடர்ந்து படிக்க, அவர்களும் இடைநின்றுவிடாமல் தேவையான அறிவுரைகள் கூறி உதவிகளையும் செய்து வந்தேன். அவர்கள் பள்ளி கல்வியை தொடர்ந்தனர். தொடர்ந்து தேவையான உதவிகளை செய்து வந்தேன். கல்லூரி கல்வியை தொடரவும் நடவடிக்கை எடுத்தேன். கங்கா, பள்ளி கல்வியை முடித்துவிட்டு பட்டப்படிப்பில் சேர்ந்து இருப்பதும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது. அவர்கள் வசிக்கின்ற கூடாரம் போதிய பாதுகாப்புடன் இல்லாததால் அவர் மாணவியர் விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : student , College with confidence
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...