×

லத்தி வீசியதால் டூவீலரில் இருந்து விழுந்த வியாபாரி பலி... போலீஸ் மீது நடவடிக்கை கோரி இரண்டாம் நாளாக போராட்டம்

மதுரை: லத்தி வீசியதில் நிலைதடுமாறி விழுந்து வியாபாரி பலியான விவகாரத்தில், போலீஸ் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் 2ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றும் பிரேத பரிசோதனை நடக்காததால் மதுரை ஜி.ஹெச்சில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தகுமார் (27). பழைய டயர் வியாபாரி. இவர் கடந்த 15ம் தேதி நண்பருடன் டூவீலரில், செல்லூர் புதிய மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மறித்துள்ளனர். இவர்கள் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு போலீஸ்காரர் லத்தியை டூவீலர் மீது வீசினார். லத்தி சக்கரத்தில் சிக்கியதால், நிலைதடுமாறிய விவேகானந்தகுமார், நண்பருடன் கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில், சிகிச்சை பலனின்றி விவேகானந்தகுமார் நேற்று முன்தினம் பலியானார். இவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டது. விவேகானந்தகுமாரின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு, லத்தி வீசிய சம்பவத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2ம் நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, விவேகானந்தகுமாரின் மனைவி கஜப்பிரியா மற்றும் உறவினர்கள், மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் வாஞ்சிநாதன், 24 மனை தெலுங்கு செட்டி மாநில தலைவர் ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வாகன சோதனையின்போது தாக்குதல் நடத்திய 6 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் வெளிமாவட்ட டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்து, அதனை வீடியோவாக எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை தொடர்பாக கலெக்டர் (பொ) சாந்தகுமாரிடம் மனு கொடுத்தனர். அவர், கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். கோரிக்கை தொடர்பாக அரசின் முடிவு தெரியும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி, அனைவரும் மாலை வரை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு அமர்ந்திருந்தனர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

சுவரில் மோதி இறந்ததாக போலீசார் பொய் வழக்கு

விவேகானந்தகுமார் பாலத்தின் சுவரில் மோதி விழுந்து, காயமடைந்து இறந்ததாக மதுரை தல்லாகுளம் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு உறவினர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து அவரது தம்பி சபரி மற்றும் உறவினர்கள் கூறும்போது, ‘‘டூவீலரில் செல்லூர் மேம்பாலத்தில் சென்றபோது, போலீசார் வீசிய லத்தி சக்கரத்தின் உள்ளே சிக்கியதில்தான் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்து இறந்துள்ளார். இதற்கு காரணமான போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். போலீசார் பொய் வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. உண்மை நிகழ்வை தெரிந்து கொள்ள அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்யவேண்டும். இந்த பாலத்தில் தொடர்ந்து போலீசார் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றார்.

Tags : Dealer , Struggle
× RELATED உளுந்து வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி