×

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தேர்வான நிலத்தில் கணக்கெடுப்பு பணி தீவிரம்

உடன்குடி: குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் புராதான சின்னங்கள், கோயில்கள், நில அளவீடூகள் மற்றும் அப்பகுதிகளிலுள்ள மரங்கள் கணக்கெடுக்கும் பணி முதற்கட்டமாக தீவிரமாக நடந்து வருகிறது. விண்வெளி தொழில் நுட்பத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் என அயல்நாடுகளை நம்பியிருந்த காலம் போய் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் பெரும் முயற்சிகளால் ராக்கெட் தொழில் நுட்பத்தில் இந்தியா சர்வதேச அளவில் முன்னோடியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் ராக்கெட் ஏவுதளம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையம் மட்டுமே. இங்கு 2 ஏவுதளங்கள் உள்ளன. செயற்கை கோள்களை ஏந்திச் செல்லும் ராக்கெட்டின் திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின்கள் நெல்லை - கன்னியாகுமரி மாவட்ட எல்கையில் உள்ள மகேந்திரகிரியில் தயாரிக்கப்படுகிறது.

சர்வதேச விண்வெளி சட்டத்தின்படி ஒரு நாட்டில் இருந்து ஏவப்படும் ராக்கெட்கள் அடுத்த நாட்டின் வழியாக செல்லக்கூடாது என்பது விதி. ஆனால் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவும் போது அண்டைநாடான இலங்கை வழியே செல்லும்படி உள்ளதால் இந்த நிலையை மாற்றிட ராக்கெட்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இதனால் பல நூறு கோடிக்கு மேல் பணம் விரயமாவதாக கூறப்படுகிறது. மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு மூன்றாவது ஏவுதளம் கண்டிப்பான ஒன்றாகும் என்பதால் அதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இதற்காக, கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானி நாராயணா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், பல்வேறு மாநிலங்களிலும் பொருத்தமான இடத்தைத் தேடினர். அப்போது புதிய ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டது. பூமத்ய ரேகைக்கு மிகவும் அருகில் இருக்கும் இந்த பகுதியில் இருந்து ராக்கெட் ஏவினால் சர்வதேச விண்வெளி சட்ட விதிகளுக்குட்பட்டு முழுக்க முழுக்க இந்திய வான்வெளியிலேயே செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தற்போது குலசேகரன்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணியினை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் குலசேகரன்பட்டினம், கூடல்நகர், அமராபுரம், மாதவன்குறிச்சி, அழகப்பபுரம் அதனையொட்டியுள்ள பகுதிகளில் சுமார் 2.50 கி.மீ சுற்றளவில் சுமார் 3500 மீட்டர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்காக திருச்செந்தூர் தாசில்தார் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் கிராம உதவியாளர்கள் என வருவாய்த்துறையினர் அப்பகுதிகளில் தொடர்ந்து முகாமிட்டு புராதான சின்னங்கள், கோயில்கள், நில அளவீடூகள் மற்றும் அப்பகுதிகளிலுள்ள மரங்கள் கணக்கெடுக்கும் பணியினை முதற்கட்டமாக மேற்கொண்டுள்ளனர். பொதுப்பணித்துறை நிலமதிப்பீடு பணி முடிந்தபிறகு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : field ,Kulasekarapattinam , Rocket launcher
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது