×

பணகுடி அருகே தோட்டத்தில் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய சிறுத்தை?

பணகுடி: பணகுடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஆடுகளை மர்மவிலங்கு கடித்து குதறியது. இதனால் சிறுத்தை பீதியில் மலையடிவார கிராம மக்கள் உள்ளனர். பணகுடி அருகே மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது குத்திரபாஞ்சான். இப்பகுதிக்கு செல்லும் வழியில் பணகுடியை சேர்ந்த ராஜன் என்பவர்(44) செங்கல் சூளை நடத்திவருகிறார். அதன் அருகில் உள்ள அவரது தோட்டத்தில் சுமார் 22 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை தோட்டத்துக்குள் புகுந்த மர்ம விலங்கு அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியது. கழுத்து பகுதி குதறப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் 9 ஆடுகள் இறந்து கிடந்தன.

நேற்று காலை அங்கு பணிக்கு வந்தவர்கள் பார்த்து ராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து 9 ஆடுகள் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அங்கிருந்த 3 ஆடுகள் காணவில்லை. இதுகுறித்து ராஜன் கூறுகையில், ‘22 ஆடுகளையும் மிகவும் பாதுகாப்பாக வேலிகள் அமைத்து யாரும் உள்ளே நுழையாதவாறு வளர்த்து வந்தேன். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இரவு 12 மணியளவில் சிறுத்தை போன்ற தோற்றத்துடன் விலங்கு ஒன்று செங்கல் சூளையை சுற்றி வந்ததாக இங்கு வேலை செய்யும் பணியாளர்கள் கூறினர். மேலும் ஆடுகளின் கழுத்துடன் சேர்ந்து தொண்டை பகுதியை கடித்து ரத்தத்தை உறிஞ்சியுள்ளது. எனவே, இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருக்கலாம் என தெரியவந்துள்ளது. வனத்துறை நடவடிக்கை எடுத்து சிறுத்தையை பிடிக்க முன்வரவேண்டும்’ என்றார்.

இது குறித்து வனத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, ‘மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. எனவே செந்நாய் மற்றும் சிறுத்தை புலிகள் நடமாட்டம் அடிவார பகுதிகளில் இருக்க வாய்ப்புள்ளது. விலங்கின் கால்தடத்தை வைத்து ஆய்வு நடத்தப்பட்டு அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். தோட்டத்துக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது சிறுத்தையாக இருக்கலாம் என்ற பீதியில் கிராம மக்கள் உள்ளனர். எனவே, சிறுத்தையை பிடிக்க வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : garden ,palace , Leopard
× RELATED சென்னையில் உள்ள லீலா பேலஸில் இன்று...