×

இறுதி கட்டத்தை எட்டிய ரிங்ரோடு 27 கி.மீ. விரிவாக்க பணி... 72 கி.மீ. அவுட்டர் ரிங் ரோடு எப்போது?

மதுரை: மதுரை ரிங்ரோட்டில் 27 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் வைகை ஆற்றின் குறுக்கே விரகனூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. இந்த இன்னர் ரிங்ரோட்டினை அடுத்து மதுரையை சுற்றி 72 கி.மீ. தூரம் அவுட்டர் ரிங் ரோடு திட்டம் எப்போது? நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மதுரை நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க 1999ல் உத்தங்குடி-கப்பலூர் இடையே 27 கி.மீ. தூரம் ரிங்ரோடு உலக வங்கி கடன் உதவியுடன் ரூ.29 கோடி மதிப்பீட்டில் உருவாக்கி திறக்கப்பட்டது. 15 ஆண்டுகளில் வாகன பெருக்கத்தின் காரணமாக இந்த ரிங்ரோடு தாங்க வில்லை. எனவே இருவழிச்சாலையாக இருந்த அந்த ரிங்ரோட்டினை ரூ.213 கோடியில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி 2017 செப்டம்பரில் தொடங்கியது. நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய இருபக்கமும் 20 ஆண்டுகளுக்கு முன்பே நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இதன்படி ஏற்கனவே அமைந்திருந்த ரோட்டின் அகலம் 7.5 மீட்டரில் இருந்து 15 மீட்டராக விரிவாக்கம் செய்து சென்டர் மீடியா அமைக்கப்பட்டுள்ளது. 18 மாதங்களில் முடிக்க திட்டமிட்ட இந்த பணி 22 மாதங்களாகிய நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. விரிவாக்க பணி நடைபெறும்போது போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டது. தற்போது விரிவாக்கம் பெரும்பாலும் முடிந்துள்ள நிலையில் நான்கு வழிச்சாலை சென்டர் மீடியாவுடன் அமைந்துள்ளது. இதில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் நிம்மதியாக கடந்து செல்கின்றன.

இதுதவிர ஏற்கனவே மேம்பாலம் அமைந்துள்ள வைகை ஆற்றின் குறுக்கே விரகனூர் அருகிலும், ராமேஸ்வரம் ரயில் தண்டவாளத்தின் குறுக்கிலும் கூடுதலாக இன்னொரு மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றன. இதில் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணி முடிந்து அதிலும் போக்குவரத்து தொடங்கியது. (இது மதுரை நகரில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 10வது மேம்பாலமாகும்). நெடுஞ்சாலை துறை பொறியாளர் ஒருவர் கூறும்போது, “ரிங்ரோடு விரிவாக்கத்தில் ராமேஸ்வரம் தண்டவாளத்தின் குறுக்கே 2வது மேம்பாலம் கட்டும் பணியில் தண்டவாளத்தின் இருபுறம் மட்டும் ரயில்வே துறை சார்பில் பாலம் இணைக்கும் பணி பாக்கி உள்ளது. இதுதவிர கப்பலூரில் ரிங்ரோடு இணையும் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே கூடுதலாக இன்னொரு மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இரு மேம்பாலங்களின் பணிகளையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் ரிங்ரோடு விரிவாக்கம் முழுமை அடையும்” என்றார்.

இன்னர் ரிங்ரோடு திட்டம் நிறைவடையும் நிலையில் மதுரை வழியாக தென்மாவட்டங்களுக்கு சென்று திரும்பும் வாகனங்களில் எண்ணிக்கை எகிறுகிறது. ஏற்கனவே மதுரையை சுற்றி அவுட்டர் ரிங்ரோடு திட்டம் 2010ம் ஆண்டே உருவாக்கி ஆய்வும் முடிக்கப்பட்டது. இந்த ரிங்ரோடு வாடிப்பட்டி தணிச்சியம் அருகே நான்கு வழிச்சாலை கேட்கடையில் ஆரம்பித்து, நத்தம் சாலையில் ஊமச்சிகுளம், அழகர்கோவில் சாலை சுந்தர்ராஜன்பட்டி, சிட்டம்பட்டி, புதுதாமரைப்பட்டி, சிவகங்கை ரோட்டில் ராஜாக்கூர், ராமேஸ்வரம் ரோட்டில் சிலைமான், அருப்புக்கோட்டை ரோட்டில் வலையங்குளம். திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை, ராஜபாளையம் ரோட்டில் ஆலம்பட்டி வழியாக பெங்களூரு செல்லும் திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் இணையும் வகையில் மொத்தம் 72 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலை அமைப்பதே திட்டமாகும், இது ரூ.5 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 2 ஆண்டுக்கு முன் அறிவித்தது. இந்த திட்டம் எப்போது? நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாண்டிகோவில் சந்திப்பில் மேம்பாலம்

ரிங்ரோடும், திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையும் சந்திக்கும் சிவகங்கை ரோட்டின் பிரிவில் (பாண்டிகோவில் அருகே) போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Tags : journey ,Outer Ring Road , Madurai Ring Road
× RELATED அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின்...