×

கொல்கத்தாவை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ்சில் டாக்டர்களை தாக்க முயற்சி

* போராட்டத்தில் குதித்தனர்
* இன்று காலை வரை ஸ்டிரைக்

புதுடெல்லி: நோயாளியுடன் உதவியாளர்  ஒருவர், ஜூனியர் டாக்டர்களை அவதூறாக பேசி தாக்குதலில் ஈடுபட்டதை கண்டித்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள்  வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். கொல்கத்தாவில் மருத்துவர்கள் இருவர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் நேற்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. எனினும், நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தப்  போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை என்றும், அதே சமயத்தில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணியில் பங்கேற்க இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால்,  ஞாயிறன்று இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளியின் உறவினர்கள் சிலர், இளம் மருத்துவர்களை ஆபாசமாக பேசி தாக்குதல் நடத்தியதை அடுத்து  டாக்டர்கள் தங்களது முடிவை மாற்றிக்கொண்டு  வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதன்படி, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அத்தியாவசிய  சேவைகளை தவிர்த்து பிற சேவைகள் அனைத்தையும் டாக்டர்கள் நிறுத்தினர். இதனால், புறநோயாளிகள் பிரிவு (ஓபிடி), அறுவை சிகிச்சை பிரிவு, வார்டு விசிட் உள்ளிட்ட சேவைகள்  அனைத்தும் இன்று காலை 6 மணி வரை கிடைக்காது என்று மருத்துவர்கள் சங்கம் தெரிவித்தது.இதனிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவரை தாக்க முயன்ற விவகாரத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நோயாளியின் உறவினர்கள் இருவரை கைது செய்துள்ளனர். மற்றொருவர் தப்பியோடிவிட்டார்.




Tags : doctors ,Kolkata ,Delhi AIIMS , Following, Calcutta,Delhi AIIMS, attack doctors
× RELATED கொல்கத்தா விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசி விபத்து: இறக்கைகள் சேதம்