×

ஹாங்காங் போராட்டத்தில் பங்கேற்பேன் விடுதலையான ஜோசுவா வோங் உறுதி

ஹாங்காங்: சீனாவுக்கு  எதிரான ஹாங்காங் மக்களின் போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக  சிறையில் இருந்து நேற்று விடுதலையான, குடை இயக்க போராட்டத்தை முன்னின்று  நடத்திய சமூக ஆர்வலர் ஜோசுவா வோங்  தெரிவித்துள்ளார்.பிரிட்டனின்  காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங், 1997ம் ஆண்டு சீனாவிடம்  ஒப்படைக்கப்பட்டு, தனி நிர்வாக அமைப்பு முறையில் செயல்பட்டு வருகிறது.  ஹாங்காங்கிற்கு என தனிச்சட்டம் உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 20   நாடுகளுடன் குற்றவாளிகளை ஒப்படைக்க ஹாங்காங் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால்,  சீனாவுடன் இது போன்ற சட்ட ஒப்பந்தம் எதுவுமில்லை. கடந்த 20 ஆண்டுகளாக  இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சீனாவில் உள்ள  மோசமான சட்ட  பாதுகாப்பினால்தான் ஹாங்காங் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

இதனிடையே,  ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு நாடு  கடத்துவதுடன் வழக்கு விசாரணையை சந்திக்க கைதிகள் பரிமாற்ற சட்டத்தில்  திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.  இது ஹாங்காங்கின்  நீதி அமைப்பில் தலையிடுவதாக உள்ளது என கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள்  போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த புதன்கிழமை நடந்த போராட்டத்தில்  போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மீண்டும் ஞாயிற்றுக்கிழமை  லட்சக்கணக்கான மக்கள் வீதியில் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். இந்த  கொடிய சட்டத்தை எதிர்த்து வணிகர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஹாங்காங்  நிர்வாகம், சீன அரசுக்கு எதிர்ப்பு  தெரிவிப்பவர்கள் மற்றும் மத குழுக்கள்  என சமூகத்தின் அனைத்து பிரிவினரும் வெள்ளை உடை அணிந்து இப்போராட்டத்தில்  பங்கேற்றனர்.

மக்கள் கூட்டத்தை கண்டு அஞ்சிய அரசு நிர்வாகம் சட்ட  திருத்தத்தை தற்காலிகமாக ஒத்தி  வைப்பதாக தெரிவித்தது. ஆனால் அதனை  முற்றிலுமாக கைவிட வேண்டும் என போராட்டம் நடக்கிறது.இந்நிலையில் கடந்த மே மாதம் சிறைக்கு சென்ற,  ஜோசுவா வோங் நேற்று விடுதலையானார். அவர் மக்களின்  இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார். சீனாவால் ஆளப்பட்டுவரும் தங்களது நிர்வாகத்தில் ஜனநாயக   மாற்றம் நிகழ வேண்டும் என்று ஜோசுவா வோங், அலெக்ஸ் சோவ், நாதன் லா உள்ளிட்ட  இளைஞர்கள் கடந்த  2014ம் ஆண்டு, குடை இயக்கம் எனப்படும் ஜனநாயக போராட்டத்தை முன்னெடுத்து  நடத்தினர்.Tags : Hong Kong Struggle ,Joshua Wong , Hong Kong ,struggle, Liberator Joshua Wong, confirmed
× RELATED கொல்ல முயற்சி; இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேருக்கு சிறை தண்டனை