கன்னியாகுமரி தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் சேர்க்க மனு செய்யலாம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைப்பு

சென்னை: கன்னியாகுமரி தொகுதியில் 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அவர்கள் மீண்டும் மனு செய்து பெயர் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறி சென்னை உயர்  நீதிமன்றம் முடித்துவைத்தது. கன்னியாகுமரி எம்பி தொகுதியில், கடற்கரையோரம் உள்ள கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் இருந்து  45 ஆயிரம் வாக்காளர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. தேர்தல் நேரத்தில் இது  தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு கட்சிகள் புகார் கொடுத்தனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் மீனவர்கள் கூட்டமைப்பின்   கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளரான ராஜ்குமார்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 அதில், மக்களவை தேர்தலுக்கு முன் 7 முறை வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம்பெறவில்லை என்று யாரும் புகார் செய்யவில்லை.  பல முறை வாக்காளர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள், உரிய ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பித்தால், அவர்களது பெயர் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பெயர் நீக்கப்பட்டவர்கள், உரிய ஆவணங்களுடன் தங்களது பெயரை சேர்க்க ேதர்தல் ஆணையத்திடம்  விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Removal ,voters ,constituency ,Kanyakumari ,High Court , Kanyakumari , Dismissed voters,high court
× RELATED பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக...