×

கோவை அருகே சித்த மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் அரசு கல்லூரி மாணவி உயிரிழப்பு: மருத்துவரை கைது செய்ய உறவினர்கள் மறியல்

கோவை: கோவையில் சித்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற அரசு கல்லூரி மாணவி பலியானார். தவறான சிகிச்சை அளித்த மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.கோவை, குனியமுத்தூர் அருகே குளத்துப்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா. இவர்களது மகள் சத்யப்பிரியா(20), கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. அரசியல் அறிவியல் 3ம்  ஆண்டு படித்து வந்தார். மாதவிடாய் கோளாறு காரணமாக இவரை செல்வபுரத்தில் உள்ள மனோன்மணி சித்த வைத்தியசாலைக்கு கடந்த ஜனவரி 12ம் தேதி சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு மருத்துவர் குருநாதன் சித்த மருந்து பொடிகளை கொடுத்து  அனுப்பினார்.அதை சாப்பிட்டதில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவர் குருநாதனிடம் தெரிவித்ததும் மாற்று மருந்து பொடி வழங்கினார்.

இதை சாப்பிட்ட சத்யப்பிரியாவுக்கு முகம் வீங்கி உடல் நல கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 22ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை அவர்  இறந்தார்.சித்த மருத்துவரின் தவறான சிகிச்சையால் சத்யப்பிரியா இறந்ததாக கூறி, மருத்துவர் குருநாதனை கைது செய்யவும், புகார் அளித்தும் வழக்கு பதியாத போலீசாரை கண்டித்தும் கோவை அரசு மருத்துவமனை முன் நேற்று காலை மறியலில்  ஈடுபட்டனர். அவர்களை ரேஸ்கோர்ஸ் போலீசார் சமரசம் செய்து அனுப்பினர். இதுகுறித்து சத்யபிரியாவின் பெரியப்பா மகன் சரவணன் கூறுகையில், சித்த மருத்துவரின் தவறான சிகிச்சையால்தான் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக ேம 1ம் தேதி செல்வபுரம் போலீசில் புகார்  அளித்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் மே 31ம் தேதி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தோம். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சத்யபிரியாவின் மரணத்திற்கு காரணமான மருத்துவர் குருநாதனை கைது செய்ய வேண்டும். சத்யபிரியாவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Tags : Government College ,student deaths ,hospital ,relatives ,Sitha ,doctor ,Coimbatore , Siddha Hospital , Government, relatives picking , doctor
× RELATED தந்தை பெரியார் அரசு கல்லூரியில் வரலாற்றுத்துறை முப்பெரும் விழா