×

தமிழக, ஆந்திர எல்லையில் மீன்பிடிக்க சென்ற காசிமேடு மீனவர்கள் 7 பேர் மாயம்: உறவினர்கள் பரிதவிப்பு

பெரம்பூர்: காசிமேடு பகுதியில் இருந்து தமிழக, ஆந்திர எல்லையில் மீன்பிடிக்க சென்ற 7 பேர் மாயமாகினர். அவர்களது நிலை என்னவென்று தெரியாததால் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.சென்னை காசிமேடு காசிபுரத்தை சேர்ந்த மீனவர் நந்தன் (65) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பால்ராஜ் (50), ஸ்டீபன் (32), துரை (55), கருத்தக்கண்ணு (65), புகழேந்தி (59), மதி (59), மற்றொரு மதி (50) ஆகிய 7 பேரும் கடந்த 4ம் தேதி மீன் பிடிப்பதற்காக தமிழக, ஆந்திர மாநில கடலோர பகுதிக்கு சென்றுள்ளனர். ஆனால், 13 நாட்களாகியும் இதுவரை வீடு திரும்பவில்லை. இவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லாததால் அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுபற்றி விசை படகு உரிமையாளர் நந்தன் மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர் மீன்வளத்துறை இயக்குனரகம் மற்றும் மீன்பிடி துறைமுக போலீசில் கண்ணீர் மல்க புகார் செய்தனர். அப்போது, மீன்பிடிக்க சென்ற மேற்கண்ட 7 மீனவர்களும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.  அவர்களை உடனடியாக கண்டுபிடித்து கொடுங்கள் என்று தெரிவித்து இருந்தனர்.

 இதையடுத்து மாயமான மீனவர்களை கடலோர காவல்படையினர் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆந்திர கடலோர பகுதியில் விசைப்படகு ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக கடலோர காவல்படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதில், கரை ஒதுங்கிய படகு காசிமேடு பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களின் படகு என்பது தெரியவந்தது. ஆனால் மீனவர்கள் 7 பேரை காணவில்லை. அவர்களை ஆந்திர மீனவர்கள் பிடித்து சென்றார்களா?, அல்லது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதா? என்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது.மேலும், ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய பகுதிகளில் உள்ள மீன் வளத்துறைக்கும்  இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 7 பேர் மாயமானதால் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.

Tags : fishermen ,Andhra ,border , 7 fishermen ,went , fishing ,Andhra border, fishermen
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...