×

ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீருக்கு பதிலாக உவர்ப்பு நீர் வழங்கிய அமமுகவினர்: பொதுமக்கள் அதிருப்தி

பெரம்பூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் தினமும்  திண்டாடி வருகின்றனர். ஆனால், இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு மெத்தனப் போக்கில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க திமுகவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.அதன்பேரில்,  தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், திருவொற்றியூர், பெரம்பூர், கொளத்தூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, ஏழுகிணறு,  துறைமுகம், கொத்தவால்சாவடி, வால்டாக்ஸ் சாலை, வில்லிவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் திமுகவினர் சார்பில் டேங்கர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சில இடங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட  கொடுங்கையூர் எழில்நகர், எம்ஜிஆர் நகர், காசிமேடு ஆகிய  பகுதி மக்களுக்கு, அமமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் சார்பில், டேங்கர் லாரிகள் மூலம் இலவச குடிநீர் வழங்கப்பட்டது. இதை பொதுமக்கள் குடங்களில் பிடித்து சென்றனர். வீட்டுக்கு சென்று இந்த குடிநீரை பருகியபோது, உவர்ப்பாக இருப்பது தெரிந்தது. இதனால், அந்த நீரை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும், பொதுமக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதால், அமமுகவினர் இலவசமாக குடிநீர் வழங்குவதாக கூறி, உவர்ப்பு நீரை வழங்குவதா என பொதுமக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.


Tags : constituency ,RK Nagar , Drinking,water , RK Nagar,constituency
× RELATED ஆர்.கே.நகர் பகுதி மக்கள் பிரச்னைக்கு...