சென்னை மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 331 பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம்

சென்னை: சென்னையில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டுவரும் 331 பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து பள்ளிகளும் பள்ளி கல்வித்துைறயின் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரம் பெற வேண்டும். இதனைத் தொடர்ந்து வட்டார மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் சம்பந்தபட்ட மாவட்டங்களில் செயல்பட்டு அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டுவரும் 331 பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுடன் அப்பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி சான்றுகள் தகுதியற்றதாகவும் அரசால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளை எழுத முடியாத நிலையும் ஏற்படும். எனவே சென்னை மாவட்டத்தில் 331 பள்ளிகள் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டுவருவது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதை பெற்றோர் முழுவதும் தவிர்க்க வேண்டும். நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள பள்ளிகள் தொடர்ந்து தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மழலையர் பள்ளிகளே அதிகம்

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள பட்டியலில் மழலையர் பள்ளிகளே அதிகம் உள்ளன. 331 பள்ளிகளில் 200க்கு மேற்பட்ட மழலையர் பள்ளிகள் அங்கீகாரம் மற்றும் தடையின்மைச் சான்று இல்லாமல் செயல்பட்டுவருவது கண்டறியப்பட்டுள்ளது.

× RELATED அனைத்து பள்ளிகளில் புதிதாக...