×

பேராசிரியர் அய்யாசாமி மறைவு : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பேராசிரியர் அய்யாசாமி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கிய மாணவராகக் கல்வி பயின்ற காலத்திலிருந்தே, திராவிட இயக்கச் சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தவரும், திராவிட  இயக்கத்தின் லட்சியங்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான பேராசிரியர் அய்யாசாமி உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற துயரச்செய்தி கேட்டு வேதனையடைந்தேன்.அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தன் வாழ்நாள் முழுவதும் திராவிட இயக்கக் கொள்கைகளைத் தனது எழுத்தாற்றலின் வாயிலாகவும், மொழிபெயர்ப்புத் திறன் மூலமாகவும் அனைத்து திசைகளுக்கும் கொண்டு சென்ற அய்யாசாமி, 1960களில் கல்லூரிப் பேராசிரியராக மாணவர்கள் மத்தியில் திராவிட இயக்கச் சிந்தனைகளுக்கு வித்திட்டவர் என்பதை மறக்க முடியாது.

அவர் ஆங்கிலத்தில் எழுதிய திமுக வரலாற்றுச் சிறு நூலினை, தலைவர் கலைஞர் வெளியிட்டுச் சிறப்பு சேர்த்தார்கள். 2010-ம் ஆண்டு தமிழக அரசின் திரு.வி.க விருதும், 2016-ம் ஆண்டு நடந்த முப்பெரும் விழாவில் தந்தை பெரியார் விருதும் பெற்றவர் பேராசிரியர் அய்யாசாமி. இந்த இரண்டு விருதுகளையும் கலைஞர் திருக்கரங்களினாலே பெற்ற பெரும் பேற்றினை அடைந்தவர். பேராசிரியர் அய்யாசாமி, கலைஞர் மீது மாறாப் பற்றும், நீங்காப் பாசமும் வைத்திருந்ததை நான் அறிவேன். திராவிட இயக்கத்திற்குப் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கும் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட இயக்கத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Ayyasamy ,demise ,MK Stalin ,DMK , Professor Ayyasami's death,DMK leader MK Stalin's condolences
× RELATED தம்பியை தாக்கிய அண்ணன்களுக்கு போலீஸ் வலை நிலத்தில் மண் கொட்டிய தகராறு