×

மின்தடையை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் : அமைச்சர் தங்கமணி உத்தரவு

சென்னை: மின்தடை ஏற்படும் காலங்களில் விரைவாக செயல்பட்டு, உடனுக்குடன் அதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்துறை அமைச்சர் தங்மணி உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். தொழிற்சங்கத்தினரும் இதற்கு மின்பற்றாக்குறையே காரணம் என்றும், தரமற்ற பொருட்கள் பயன்படுத்துவதால் தடை ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் வாரியம் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. எவ்விதமான மின்தடையும் இல்லை என்றும் கூறி வருகிறது. இந்நிலையில், அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், கலந்துகொண்ட அமைச்சர் தங்கமணி, மின்தடை ஏற்படும் காலங்களில் விரைவாக செயல்பட்டு, உடனுக்குடன் அதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.  

இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் மின்துறை அலுவலர்கள் பணி ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், இணை மேலாண்மை இயக்குநர் சுபோத்குமார், மேலாண்மை இயக்குநர், மண்டல தலைமை பொறியாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கோடைகாலத்தில் மின் கட்டமைப்பு மேலாண்மை, மின் தடங்கல் மற்றும் மின் உபகரணங்கள் பராமரிப்பு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.  மேலும், கோடைகாலத்தில் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்புடன் பணிபுரிய வேண்டும். மின் தடங்கல் ஏற்படும் காலங்களில் விரைவாக செயல்பட்டு மின் தடங்கல் உடனுக்குடன் நீக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags : Dougamani , Resistance , fixed immediately
× RELATED மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின்வாரிய...