×

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும்  நிறுவனங்களை ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர்  உத்தரவிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், `பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’’ உருவாக்கிட, தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தடைசெய்யப்பட்டுள்ள ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் தடை அறிவிப்பின் மீதான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், அன்பழகன், கருப்பணன், உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்த பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களை ஆய்வு செய்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுவது பற்றியும், அவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய ஏற்கனவே அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதை பற்றியும் விவாதிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், அரசின் ஆணையை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தி, சுற்றுச்சூழலை மீட்டெடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

துணை முதல்வர் புறக்கணிப்பு


தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிளாஸ்டிக் தடை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு செய்தார். மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். சமீபகாலமாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். இது அவர்கள் இருவருக்குள்ள பனிப்போரை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தற்போது கோவையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருவதால்தான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டது.

Tags : companies ,Tamil Nadu , Heavy crackdown ,banned plastics companies ,Tamil Nadu
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...