×

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் : தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையிலும் தமிழகத்தின் வறட்சி பாதித்த மாவட்டங்களிலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருவது உண்மை. தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இனிவரும் காலங்களில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசு மற்றும் மக்களின் கடமை. தமிழ்நாட்டின் சராசரி ஆண்டு மழை அளவு 945 மில்லி மீட்டர். இது தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு போதுமானதாகும். ஆனால், அதை சேமித்து வைப்பதற்கான ஆர்வமும், பொறுப்புணர்வும் நம்மிடம் இல்லாததுதான் இன்றைய நிலைக்கு காரணமாகும்.

மழைநீர் சேமிப்புத் திட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார். அதன்பயனாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. ஆனால், அதன்பின் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் அரசும், மக்களும் காட்டிய அலட்சியம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடிநீர் கிட்டத்தட்ட வறண்டு விட்டது. தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் 3 நாட்களில் மட்டும் சென்னையில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. சென்னை முழுவதும் மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தால், அந்த மழைக்கு பல டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டிருக்கும். அது சென்னைக்கு பல மாதங்களுக்கு குடிநீரைக் கொடுத்திருக்கும். ஆனால், போதிய அளவு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், பெய்த மழையில் பெருமளவு நீர் வீணாக கடலில் கலந்தது. வழக்கமாக பெய்யும் மழையில் 40 சதவீத தண்ணீர் கடலில் கலக்கிறது. எனவே, மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மழைநீரை அதிகமாக சேமிக்க முடியும்.

மழைநீர் சேமிப்பு என்பது வீட்டளவில் தொடங்கி நாட்டளவில் செயல்படுத்தப்பட வேண்டிய அவசியமான திட்டமாகும். அதன்மூலம்தான் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும். இதை உணர்ந்து மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மழைநீர் சேமிப்பை தமிழகம் முழுவதும் தீவிர இயக்கமாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Ramadoss ,Government ,Tamil Nadu , Rainwater harvesting program , actively implemented
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...