×

நைஜீரியாவில் கால்பந்து ரசிகர்கள் கூட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 30 பேர் பலியான பரிதாபம்

கானோ:  நைஜீரியாவில் கால்பந்தாட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் நடத்தப்பட்ட 3 மனித வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் கொண்டுங்கா பகுதியில்  நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் திறந்தவெளி அரங்கத்தில் இருந்த பிரமாண்ட திரையில் கால்பந்தாட்ட போட்டியை ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அரங்கத்திற்குள் நுழைய முயன்ற மனித வெடிகுண்டு ஒருவரை அரங்கின் உரிமையாளர் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தினார். மனித வெடிகுண்டாக வந்தவருக்கும் அங்கிருந்த ஆபரேட்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது மனித வெடிகுண்டு நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தான். இதில் அங்கிருந்த பலர் பலத்த காயமடைந்தனர்.

மேலும் 2 மனித வெடிகுண்டு நபர்கள் டீக்கடை அருகே இருந்த ரசிகர்கள் கூட்டத்துடன் கலந்து விட்டனர். தொடர்ந்து அவர்கள் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தனர். இந்த இரண்டு சம்பவங்களிலும் ஆபரேட்டர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 48 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர். மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது. மேலும் காயமடைந்த நிலையில் 40 பேர் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.  இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் போகோஹராம் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Tags : Suicide attack ,football fans ,Nigeria , Suicide ,attack , Nigeria's football,fans,30 killed
× RELATED ரூ.100 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்