×

தண்ணீர் பஞ்சத்துக்கு மேலும் ஒரு பலி குடிநீருக்காக தோண்டிய பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுமி சாவு : புதுக்கோட்டையில் பரிதாபம்

புதுக்கோட்டை:  தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தலைநகர் சென்னையிலேயே குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடி கிராமத்தை சேர்ந்த தனபால் (38) பிரவீன் என்பவரால் கொல்லப்பட்ட சம்பவமும், சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், அமரேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆதிமூல ராமகிருஷ்ணன் (40) என்பவர், மோகன் என்பவரின் மனைவி சுபாசினியை (28) கத்தியால் குத்திய சம்பவமும் நிகழ்ந்துள்ளது. தண்ணீருக்காக ஆறு, ஏரிகளில் ஊற்று தோண்டி எடுப்பது, பள்ளம் தோண்டி தண்ணீர் சேமிப்பது என்று ஆபத்தான முயற்சிகளிலும் பொதுமக்கள் இறங்குகின்றனர். இப்படி குடிநீருக்காக பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் ஒரு சிறுமி விழுந்து உயிரிழந்திருக்கும் சம்பவம் நடந்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு: புதுக்கோட்டை மாவட்டத்தில் வைத்தூர் கிராமம் உள்ளது. இப்பகுதியில், 5000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வைத்தூர் பஞ்சாயத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குடிநீர் முறையாக வராததால் ஆங்காங்கே குடிநீருக்காக வரும் குழாய்களின் அருகே 4, 5 அடிக்கு குழிவெட்டி அதில் இறங்கி குடிநீரை பிடித்து வந்தனர். இதனால் இரவு நேரங்களில் சாலைகளில் நடந்து வரும் பொதுமக்கள் இக்குழிக்குள் தவறி விழும் சம்பவங்களும் நடந்தேறியுள்ளது. இதையடுத்து, குழியை மூடி குடிநீர் முறையாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், ஊர் பஞ்சாயத்து அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கையை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு குடிநீருக்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் முழுவதும் தேங்கியுள்ளது.

இந்தநிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர்-வெண்ணிலாவின் 3 வயது குழந்தை பருவதாரணி, அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றவள் வீடு திரும்பவில்லை. பெற்றோரும், கிராமமக்களும் தேடியபோது சிறுமி கையில் வைத்திருந்த பை, ஒரு குழி அருகே கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, அந்த குழியை சோதனை செய்தபோது பருவதாரணி மயக்கமுற்று கிடந்தாள். இதனையடுத்து சிறுமியை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். உரிய நேரத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீர் விநியோகம் செய்து இருந்தால் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : death , Little girl dies , rain water
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...