×

மதுரையில் 2 மாதம் சம்பளம் வழங்காததால் வக்பு வாரியக்கல்லூரி முன்பு பேராசிரியர்கள் போராட்டம்

மதுரை: இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து, மதுரை வக்பு வாரியக்கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை கே.கே.நகரில் வக்பு வாரியக்கல்லூரி உள்ளது. செயலாளராக ஜமால் மொய்தீன் உள்ளார். இக்கல்லூரி நிர்வாக பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இங்கு பணியாற்றும் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு, கடந்த ஏப்ரல், மே மாதத்திற்குரிய சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்குவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும், கல்லூரி கல்வி இயக்குநர் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் கடந்த மாதம் 31ம் தேதியுடன் ஓய்வு பெற்றதால் சம்பளம் வழங்கும் நடவடிக்கைகள் முடங்கின. ஜூன் மாத சம்பளமும் வழங்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இதற்கிடையே கல்லூரி விடுமுறை முடிந்து, நேற்று காலை வகுப்புகள் வழக்கம்போல துவங்கின. அப்போது உடனடியாக சம்பளம் வழங்கக்கோரி கல்லூரி வாசல் முன்பு 60 பேராசிரியர்கள், 30 அலுவலர்கள் உள்ளிட்டோர் பணிகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘ஏப்ரல், மே மாதம் சம்பளம் வழங்கவில்லை. எனவே கல்லூரி கல்வி இயக்குநர் தலையிட்டு சம்பள பாக்கியை நிலுவையின்றி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள், அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கல்லூரி கல்வி இயக்குநரிடம் பேசி, சம்பளம் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் தரப்பட்டது. அதன்பின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து மதியத்திற்கு பிறகு பேராசிரியர்கள், அலுவலர்கள் பணிக்கு திரும்பினர்.

Tags : Professors ,Wakpu Board , Professors struggle,Wakku Wariyalalluri,not pay ,2 months in Madurai
× RELATED தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல்...