×

காரைக்குடி அருகே இருபிரிவினரிடையே பயங்கர கலவரம் போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : 30 பேர் கைது

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர் பகுதியில் இரு பிரிவினர் இடையே இடப்பிரச்னை தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு வசந்த மாளிகை பஸ் ஸ்டாப் பகுதியில், இருபிரிவை சேர்ந்தவர்களுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென ஒரு தரப்பினர் கம்பு, உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். கற்களையும் வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களும் திரண்டு எதிர் தாக்குதலில் இறங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. அப்பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. சரமாரியாக கற்களை வீசியதில் வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. மேலும் அப்பகுதியில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார், டூவீலர்களை அடித்து நொறுக்கினர்.

சம்பவ இடத்திற்கு எஸ்பி ஜெயச்சந்திரன், காரைக்குடி டிஎஸ்பி மோகன் தம்பிராஜன் தலைமையிலான போலீசார் சென்றனர். மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் எச்சரிக்கையை மீறி அவர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஒரு தரப்பினர் போலீசாரை நோக்கி 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர்.  இதில் அதிர்ஷ்டவசமாக போலீசாருக்கு காயம் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்து அமைதியை ஏற்படுத்தினர். இந்த மோதல் மற்றும் குண்டுவீச்சு சம்பவத்தால், திருச்சி - காரைக்குடி சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மோதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, காரைக்குடி தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக இரு பிரிவை சேர்ந்த 30 பேரை காரைக்குடி வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையம் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதையடுத்து அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : area , Petrol bombing, police over bogus ,riot police,Karaikudi
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...