×

உயர்மின் கோபுரத்தில் இருந்து காந்த அலைகள் பரவல் : ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி நேரில் ஆய்வு

பெருந்துறை: பெருந்துறை அருகே உயர் மின்னழுத்த கோபுரம் அமைந்த பகுதியில் மின் காந்த அலைகள் பரவி உள்ளது. இதை ஈரோடு எம்பி கணேசமூர்த்தி நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினார். திருப்பூர் மாவட்டம் ராசிபாளையத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் இண்டூர் வரை செல்லும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் 400 கிலோ வாட் உயர்மின் கோபுரம் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே மூனாம்பள்ளியில் அமைந்துள்ளது. இது அமைந்த பகுதியில் மின் காந்த அலைகள் ஏற்படுவதாகவும், அதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் புகார் கூறி வந்தனர். இதுகுறித்து ஆய்வு செய்ய ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மூனாம்பள்ளியில் உள்ள உயர் மின் அழுத்த கோபுர பகுதிக்கு வந்தார். அங்கு நின்ற அவரது உடலில் டெஸ்டரை வைத்து பார்த்த போது டெஸ்டர் ஒளிர்ந்தது. கையில் டியூப்லைட்டை பிடித்துப் பார்த்தார். அப்போது அவரது உடல் வழியாக மின்சாரம் டியூப்லைட்டிற்கு பாய்ந்து அதுவும் ஒளிர்ந்தது.

இதுகுறித்து எம்.பி.கணேசமூர்த்தி கூறியதாவது:  உயர் மின்கோபுரத்தின்கீழ் உள்ள பகுதியில் வசிக்கும்போதும், வேளாண்மை செய்யும்போதும், மின்காந்த அலைகளால் ஏற்படும் பாதிப்புகளை உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும். நாடாளுமன்றத்திலும் ஆதாரங்களுடன் தெரிவிக்கப்படும். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : tower , Diffusion of magnetic waves, tower of height
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...