×

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எங்கும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை : சொல்கிறார் அமைச்சர் வேலுமணி

சென்னை: தமிழகத்தில் எங்கும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ெசன்னையில் கூறினார். தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீர் பிடிக்க பெண்களும், ஆண்களும் படாதபாடு பட்டு வருகின்றனர். குடம் தண்ணீர் 10க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பணம் கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு குடும்பத்தில் உள்ள ஆண் தினசரி ₹300 சம்பாதித்தால் அதில் ₹200 தண்ணீருக்கே செலவு செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் வீட்டில் உள்ள ஆழ்துழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் லாரி தண்ணீரை எதிர்பார்த்து விடியவிடிய காத்திருக்கும் நிலை உள்ளது. சில இடங்களில் லாரி தண்ணீர்கூட கிடைக்காத நிலையும் உள்ளது. ஒரு லாரி தண்ணீர் ₹1000க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 5 ஆயிரத்தை தாண்டிவிட்டது. குறிப்பாக அடுக்கு மாடி வீடுகளில் இருப்பவர்கள், தண்ணீர் இல்லாமல் வீடுகளை காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தண்ணீர் இல்லாமல் ஓட்டல்கள், மேன்சன்கள், தனியார் நிறுவனங்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்ேத பணியாற்ற உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தை சரி செய்வது எப்படி, என்னென்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது, மேலும் என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை கூட்டம் சென்னை, மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன்பிறகு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சென்னையில் நாள் ஒன்று 525 மில்லியின் கனஅடி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் நடைகள் தண்ணீர் லாரிகள் இயக்கப்படுகிறது. இதை 10 ஆயிரம் நடைகளாக அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் எந்த ஓட்டல்களும் மூடப்படவில்லை.  

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வதந்தி கிளப்பியுள்ளனர். இதில் உண்மையில்லை. தமிழகத்தில் குடிநீர் விநியோகம் சீராக  வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தற்போது நிலவும் சூழ்நிலையில் வீண்  வதந்திகளை நம்பி செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டாம். சென்னையில் குடிநீர் விநியோக பணிகளை கண்காணிக்க மண்டலத்திற்கு ஒரு கண்காணிப்பு பொறியாளர், ஒரு செயற் பொறியாளர் கொண்ட குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். 3 மண்டலங்களை ஒரு தலைமை பொறியாளர் கண்காணிப்பார். ஒவ்வொரு பகுதிகளிலும் ஆய்வு செய்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். சென்னையில் உள்ள 200 வார்டுகளில் குடிநீர் விநியோகம் செய்யும் பணியினைை மேற்கொண்டு வரும் பணிமனை பொறியாளர்களை கண்காணிக்க ‘கைசால்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் அவர்கள் ஆய்வு செய்யும் இடம், நேரம் போன்றவை கண்காணிக்கப்படும். குடிநீர் புகாரை பெற 24 மணி நேரமும் செயல்படும் தொலை பேசி இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி 044-45674567 என்ற தொலை பேசி எண்ணில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம். மேலும் பகுதி வாரியாகவும் இலவச தொலைபேசி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை போன்று பேரூராட்சிகளிலும் மற்ற உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகளில் மாவட்ட அளவில் செயலியை உருவாக்குவது என்றும், ஒன்றிய அளவிலும் செயலியை உருவாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீரை குடிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூங்கா, செடி கொடிகளுக்கு பயன்படுத்த கூடாது. பொது குளியல் தொட்டிகளில் தண்ணீர் வீணாவதை முற்றிலும் தடுக்க வேண்டும். குடிநீர் பிரச்னையை தீர்க்க வார்டு வாரியாக பொறுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் ஆய்வு நடத்த வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் ஏழைகள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Minister Velumani ,Chennai , No water shortage , Tamil Nadu, including Chennai
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...