×

பள்ளிகள் திறக்கப்பட்டு 24 நாட்கள் ஆகியும் 3, 4 , 5 ஆகிய வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் இன்னும் அச்சடிக்கப்படவில்லை : மாணவர்கள் அதிர்ச்சி

சென்னை: கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு 24 நாட்கள் ஆகியும் 3,  4 , 5, 7 , 8 ஆகிய வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் பள்ளிகளில் வழங்கப்படவில்லை என தெரிகிறது. தனியார் பள்ளிகளில் இதர வகுப்பு பாட புத்தகங்கள் சரிவர கிடைக்காததால் பெற்றோர்கள் டிபிஐ வளாகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

புதிய பாடத்திட்ட தயாரிப்பில் தாமதம்


கடந்த ஆண்டு 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 2, 7, 10, 12ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு அச்சுப் பணிகள் நிறைவடைந்தன. இதனிடையே 3, 4, 5, 8 வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த நிலையில் பாடபுத்தகங்கள் தயாரிப்புப் பணிகள் அவசர அவசரமாக நடைபெறுகின்றன. எனினும் 3, 4, 5, 8 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் இதுவரை முழுமையாக அச்சடிக்கவில்லை என்பது கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் தெரியவந்துள்ளது. ஏனெனில், 3, 4, 5, 8 வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என இறுதி நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்டதால், புதிய பாடத்திட்ட தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இன்னும் 2 வார காலம் ஆகும் என தகவல்

இதனால், புதிய பாடத்திட்டத்தின் இறுதி வடிவமானது மே மாதத்தில் தான் தமிழக பாடநூல் கழகத்திற்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய பாடத்திட்டத்தை அச்சிடும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜூன் 3ம் தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த நான்கு வகுப்புகளுக்கான புத்தகங்கள் முற்றிலுமாக கிடைக்கவில்லை என பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் முழுமையாக முடிய இன்னும் 2 வார காலம் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதற்கிடையில், பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வரை ஆசிரியர்கள் www.textbooksonline.tn.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Textbooks, students, trauma, schools
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...