×

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் ராணுவ மேஜர் வீரமரணம்: மேலும் ஒரு அதிகாரி, 2 வீரர்கள் படுகாயம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் அருகே அனந்தநாக்கில் பயங்கரவாதிகளுடன் ஆன துப்பாக்கிச்சண்டையில் காயமடைந்த ராணுவ மேஜர் வீரமரணமடைந்துள்ளார். காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் அச்சாபல் என்ற பகுதியின் பிதூரா கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை 19 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ், ஜம்மு-காஷ்மீர் போலிஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியோர் சுற்றி வளைத்தனர். இவர்கள் அனைவரும் தீவிரவாதிகளை தப்பவிடாமல் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளின் உடல்களை கைப்பற்றிய போலீசார், அவர்களின் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே 3 அல்லது 4 தீவிரவாதிகள் அங்கு பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது. இந்த நிலையில், துப்பாக்கிச்சண்டையின்போது படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ மேஜர் சிகிச்சை பலனின்றி வீரமரணமடைந்துள்ளார். மேலும், ஒரு ராணுவ மேஜர் மற்றும் 2 வீரர்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடைபெற்று வரும் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே வன்முறை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



Tags : soldiers ,Army Major ,Kashmir , Kashmir, Terrorists, gunfight, Army Major, Soldiers
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்