×

அரிமளம் காடுகளின் மூலம் பல கோடி வருவாய் இருந்தும் வன விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?

* பொதுமக்கள் கேள்வி

திருமயம் : அரிமளம் காடுகளின் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் பெரும் அரசு, அங்குள்ள வன விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருமயம் தாலுகா அரிமளம், மிரட்டுநிலை, செங்கீரை, ஆயிங்குடி, ராயவரம் மேல்நிலைப்பட்டி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான ஏக்கர் பரந்து விரிந்து கிடக்கும் மாவட்டத்தின் முக்கிய வனப்பகுதியாகும். இதில் மான்கள், நரி, மாடுகள், மயில்கள், முயல்கள், குரங்குகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த விலங்குகளின் எண்ணிக்கை 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெருமளவில் இருந்தது.

இந்நிலையில் வறட்சி, பருவ நிலை மாற்றம், பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து அழிவின் விளிப்பில் உள்ளது. மேலும் வறட்சி காலங்களில் மயில்கள், மான்கள் இறை நீர் தேடி கிராமப்புற குடியிருப்பு பகுதிக்குள் வரும்போது நாய்களுக்கு இரையாகின்றன என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே அதிகாரிகள் தைல மரத்தை வளர்ப்பதில் காட்டும் ஈடுபாட்டை வன விலங்குகள் பாதுகாப்பில் காட்டுவதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 அதே சமயம் தைல மரம் மூலம் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் பெரும் அரசு அரிமளம் வனப்பகுதியில் நீரின்றி வாடும் வன விலங்குகளை பாதுகாக்க சிறிது தொகையை ஒதுக்காதது ஏன் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் அரசு அரிமளம் வனப்பகுதி விலங்குகளை பராமரிக்க வருடம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்து வன விலங்குகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அரிமளத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த சாலையோரம் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டைக்கரை முனீஸ்வரன் கோயில் உள்ளது.

இந்த கோயில் அருகே வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் சில ஆண்டுகளுக்கு முன்னர் வனத்துறை சார்பில் நீர்த்தேக்க தொட்டி, கை அடிபம்ப் மற்றும் நீர்த் தேக்கங்கள் அமைக்கப்பட்டது. மழை காலங்களில் நீர்த்தேங்கங்களில் போதுமான நீர் இருப்பதால் வன விலங்குகளுக்கு நீர் பற்றாக்குறை இருந்ததில்லை. மேலும் முனீஸ்வரர் கோயிலுக்கு பொங்கல் வைக்க வரும் பக்தர்கள் அடிபம்ப் நீரை பயன்படுத்தி வந்தனர். இதனிடையே கடந்த 9 ஆண்டுகளாக அப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் நீர்த்தேக்கம் வறண்ட நிலையில் அடிபம்ப் பழுதாகியும் காணப்படுகிறது. இந்நிலையில் அடிபம்ப் பழுதாகி பல ஆண்டுகள் ஆகியும் அதனை சரி செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது பற்றி அரிமளத்தைச் சேர்ந்தவர்களிடம் கேட்ட போது: அரிமளம் வனப்பகுதிக்குள் உள்ள முனீஸ்வரர் கோயிலுக்கு தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் நேர்த்திகடன் வைத்து பொங்கல், சிதறு தேங்காய் உடைப்பது வழக்கம். பக்தர்கள் உடைக்கும் தேங்காய் சில்லுகளை இங்கு வாழும் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் சாப்பிட்டுவிட்டு வாழ்ந்து வந்தன. அருகில் வீடுகள் இல்லாத நிலையில் வறட்சி காரணமாக வன விலங்குகளுக்கு இங்கு நீர் எங்கும் கிடைப்பதில்லை.

வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அடி பம்ப் பழுதடைந்து உள்ளது. பகல் நேரதத்தில் வெளியே வராத மான், நரி உள்ளிட்ட விலங்குகள் நீருக்காக என்ன செய்யும் என நினைக்கும் போது கஷ்டமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம் வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளை அழிவில் இருந்து காக்க நீர்த் தேக்கங்களில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழுதடைந்த கை அடி பம்பை சரி செய்ய வேண்டும் என்றனர்.


Tags : Arimalam ,millions , Arimalam , pudukkottai, Tirumayam, wild animals
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...