தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து  தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த தடை உத்தரவு சென்னை மாநகராட்சியில் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம்  முதல் கடந்த ஜூன் 9ம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் 242 டன்னுக்கு மேற்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்ப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பிளாஸ்டிக் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்க  உத்தரவிடப்பட்டது.

குறிப்பாக மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் நடத்தப்படும் கடைகளாக இருந்தால் அவற்றை உடனடியாக சீல் வைக்கவும், அப்புறப்படுத்தவும்  அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சோதனை மேலும் தீவிரப்படுத்த வார்டு அளவில் 200 குழுக்களை அமைக்க மாநகராட்சி  ஆணையர் அறிவுறுத்தினார். அதன்படி ஒவ்வொரு வார்டிலும் சுகாதாரத்துறை, வருவாய்துறை, பொறியியல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய  குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தனித்தனியாகவும், குழுவாகவும் இணைந்து தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெளி  மாநிலங்களிலிருந்து பிளாஸ்டிக் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்படுவதை தடுக்க வணிவரித் துறை, காவல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம்,  மாநகராட்சி உள்ளிட்ட பல் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவர்களிடமிருந்து இன்று முதல் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி  முடிவு செய்துள்ளது. இது தொடர்பான தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின்படி பிளாஸ்டிக்  உற்பத்தியாளர்களுக்கு முதல் முறை ரூ.1 லட்சம், 2வது முறை ரூ. 2 லட்சமும், 3வது முறை ரூ. 3 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக்  பொருட்களை சேமித்து வைப்பவர்களுக்கு முதல் முறை ரூ.25 ஆயிரமும், 2வது முறை ரூ.50 ஆயிரமும், 3வது முறை ரூ.1 லட்சமும் அபராதம்  விதிக்கப்படும்.

வணிக வளாகங்களில் விற்பனை செய்தால் முதல் முறை ரூ.10 ஆயிரமும், 2ம் முறை ரூ.15 ஆயிரமும், 3வது முறை ரூ.25 ஆயிரமும் அபராதம்  விதிக்கப்படும். மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் முதல் முறை ரூ.1000, 2வது முறை ரூ.2  ஆயிரம், 3வது முறை ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். சிறு வியாபாரிகளுக்கு முதல் முறை ரூ.100, 2வது முறை ரூ.200, 3 வது முறை  ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதையும் மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் வணிக உரிமம் ரத்து செய்யப்படும்  என்று சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், தலைமைச்  செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை  பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், அரசின் ஆணையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களை ஆய்வு செய்து கடும்  நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு  மாற்றான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளதாகவும்  சுற்றுச்சூழலை மீட்டெடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.Tags : Chief Operating Officer , Prohibition, Plastics, Companies, CM Palanisamy
× RELATED ஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல...