சென்னை தடையை மீறி பஸ் டே கொண்டாட்டம் : கல்லூரி மாணவர்கள் 24 பேர் கைது

சென்னை : சென்னை அமைந்தகரையில் மாநகர பேருந்துகளை சிறைபிடித்து பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 4 கல்லூரி மாணவர்களை அயனாவரம் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் அயனாவரம், அமைந்தகரை, ராயப்பேட்டை போன்ற இடங்களில் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

பஸ்டே கொண்டாட்டத்திற்கு தடை

கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்கவும், ரூட் தல போன்ற பிரச்சினைகளை முடிவு கட்ட பஸ்டே கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற நடவடிக்கைளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகத்திற்கும் உத்தரவிடப்படடிருந்தது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு

இந்நிலையில் தமிழ்கத்தில் கோடை விடுமுறைக்கு பின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. கல்லுரி திறக்கப்படும் முதல் நாள் மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரிக்கு வருவார்கள். ஆனால் இன்று அந்த உற்சாகம் சற்று அதிகமாகி பெசன்ட் நகரில் - ஐ.சி.எஃப்.சென்ற தடம் எண் 47A பேருந்தில் பயணித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடினர்.

தடையை மீறி  பஸ் டே கொண்டாட்டம்

 47ஏ என்ற பேருந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தை அலங்காரம் செய்து, பேருந்தின் மேற்கூரையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாநகர பேருந்தின் மேற்க்கூரையின் மீது ஏறி பஸ் டே கொண்டாடிய மாணவர்களால் வாகன ஒட்டிகளும், பயணிகளும் சிரமத்திற்கு ஆளாயினர்.

4 பேர் கைது

இது தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பஸ்டே கொண்டாடிய 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரத்,சுரேஷ்,குணா, துரைராஜ் ஆகிய நால்வரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை அறிவுரை

முன்னதாக சென்னை மாநகர காவல்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தது. அது ஒரு மிகப்பெரிய பேனராக கல்லூரி வாயிலில் வைக்கப்பட்டு இருந்தது. அதில் கோடை விடுமுறை முடித்து வரும் அரசு கல்லூரி மாணவர்கள் எந்தவித குற்றச்சம்பவங்களில் ஈடுபட கூடாது என்றும் மாணவர்களிடையே ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கல்லூரி அல்லது காவல்துறையை தான் அணுக வேண்டும் என்றும் கூறி காவல்துறை உங்கள் நண்பன் என்ற அடிப்படையில் அறிவுரை செய்திருந்தது. ஆனாலும் காவல்துறையின் தடையை மீறி பஸ்டே கொண்டாடிய 4 மாணவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இதனிடையே இந்த பஸ்டே கொண்டாட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : bus day celebration , Busty, colleges, celebration, police, advice
× RELATED தேர்வு குறித்து கலந்துரையாடல் மாணவர்களுக்கு பிரதமர் அழைப்பு