×

மருந்துவாழ் மலையில் பருவமழையால் மீண்ட மூலிகைகள்

தென்தாமரைகுளம் :  குமரி  மாவட்டம் பெற்றையடியில் உள்ள மருந்துவாழ்  மலை பிரசித்தி பெற்ற மலையாகும். ராமாயண போரில் காயமடைந்த லட்சுமணன் உயிருக்கு போராடியபோது அவரை காப்பாற்ற ஆஞ்சநேயர் சஞ்சீவினி மூலிகையை மலையோடு பெயர்த்து  எடுத்து செல்லும் போது, இங்கு ஒரு பகுதி கீழே விழுந்ததாகவும், அதுவே  மருந்துவாழ்மலை என்றும் கூறப்படுகிறது. இந்த மலையில் சிவன் முருகன்,  கிருஷ்ணர், பராசக்தி, ஐயப்பன், நாகராஜர் மற்றும் ஆஞ்சநேயருக்கு சன்னதிகள்  உள்ளன. இந்த மலையில் ஏராளமான சித்தர்கள் பூஜை செய்து வருகின்றனர்.  ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் இங்கு அதிகமாக காணப்படும்.

இங்கு  வரும் மக்கள் சாமி தரிசனம் மட்டுமின்றி தியானம் போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். இம்மலையில் பரமார்த்தலிங்க சுவாமிக்கு தினமும் 3  வேளையும் பூஜைகள் நடைபெறுகிறது.  மேலும் இங்கு திருமணதடை, குழந்தையின்மை  போன்ற பிரச்னைகளுக்கு பரிகார பூஜைகளும் நடத்தப்படுகிறது. இம்மலையின்  மற்றொரு சிறப்பு இங்குள்ள மூலிகைகள் ஆகும். இங்கு பல அரியவகை மூலிகைகள்  உள்ளன. ஜலம் திரட்டி, நிலவேம்பு, கருந்துளசி, குப்பை ேமனி, நன்னாரி வேர்,  வெட்டிவேர், மக்கியிலை, பெரளியிலை, கத்தாழை, நொச்சி போன்ற ஏராளமான  மூலிகைகள் உள்ளன. இந்த மலைக்கு வரும் பக்தர்கள் ஏதாவது ஒரு மூலிகையை  வீட்டுக்கு செல்லும்போது எடுத்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் கோடை  வெப்பத்தின் தாக்கத்தால் இங்குள்ள அரிய வகை மூலிகைகள் கருகி பட்டுபோகும்  நிலை ஏற்பட்டது.

பல செடிகள் தண்ணீரின்றி காய்ந்தன. இந்நிலையில் குமரியில் தற்போது  தென்மேற்கு பருவமழை பொழிய தொடங்கியுள்ளது.  இதனால் இங்கு மூலிகை செடிகள் கருகிபோவதில் இருந்து மீண்டுள்ளன.
மழைத்துளி  உயிர்த்துளி என்பார்கள், அந்த வகையில் மனிதனை மட்டுமின்றி அரியவகை மூலிகைகளையும் பருவமழை காப்பாற்றியுள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : medicine mountain , Summer rain ,Herbs ,Kanyakumari
× RELATED யானை தாக்கி விவசாயி பலி