தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட கடந்த ஓர் ஆண்டில் ரூ.1,400 கோடி இழப்பு ;வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் தகவல்

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் செயல்ப்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ரூ.1,400 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி பல்வேறு விதமான நோய்களை பரப்புவதாக புகார் எழுந்தது. இதையடுத்து  அந்த ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு மே 22ம் தேதி  நடந்த போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.  

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் , தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதித்து, தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை அணுகலாம்” என்று தீர்ப்பளித்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சுற்றுசூழலுக்கு ஆபத்து விளைவிப்பதாக தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட கடந்த ஓர் ஆண்டில் ரூ.1.400 கோடி இழப்பு

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இந்தியாவுக்கு தேவையான காப்பர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் பொருளாதார ரீதியாக நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் அனில் அகர்வால் கூறியுள்ளார். பொருளாதார பிரச்சனையை தீர்ப்பதற்காக ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட கடந்த ஓர் ஆண்டில் ரூ.1,400 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வந்து தீர்வு கிடைக்கும் என்றும் அனில் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Tags : Anil Agarwal ,shutdown ,plant ,Sterlite ,Vedanta ,Tuticorin , Thoothukudi, Sterlite, Plant, Government of Tamil Nadu, Vedanta Group
× RELATED குறித்த நேரத்தில் படத்தை முடித்து...