×

நாடு முழுவதும் நடைபெறும் மருத்துவர்கள் போராட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்புமில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: நாடு முழுவதும் மருத்துவர்கள் ஈடுபட்டு உள்ள போராட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10ம் தேதி உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை தாக்கினர். இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த ஐந்து நாட்களாக மேற்குவங்க மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுக்கு ஆதரவாகவும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் கடந்த 14ம் தேதி முதல் 3 நாட்கள் போராட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 17ம் தேதி(இன்று) வேலைநிறுத்தம் நடத்தவும் இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை டாக்டர்களின் வேலைநிறுத்தம் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதன் மூலம் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைகள் வழக்கம் போல நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. சென்னையில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், ஹெல்மெட் அணிந்தும் போராட்டம் நடத்தினார்கள். பணி புறக்கணிப்பு செய்யவில்லை. இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மருத்துவர்கள் போராட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் மருத்துவர்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : country ,Tamil Nadu ,Minister Vijayapaskar , Doctors, protest, Tamil Nadu, Minister C. Vijayabaskar
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...