×

திருவானைக்காவல் புதிய மேம்பாலம் 19ம் தேதி பயன்பாட்டுக்கு வருகிறது

*வீடியோ கான்பரன்சிங்கில் முதல்வர் திறந்து வைக்கிறார்

திருச்சி : திருவானைக்காவல் ரயில்வே மேம்பால பணி முடிக்கப்பட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 19ம் தேதி வீடியோ கான்பரன்சிங் முறையில் பாலத்தை திறந்து வைக்கிறார். திருச்சி, திருவானைக்காவல் ரயில்வே மேம்பாலம் ரூ.47.3 கோடியில் 4 வழிப்பாலமாக கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. பழைய பாலம் இடிக்கப்பட்ட பின்னர் ரூ.7.16 கோடி மதிப்பில் கீழ் பாலம் கட்டப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த பாலம் கட்டுவதற்கான அந்த பகுதியில் நிலம் கையப்படுத்தப்பட்டது.

அதற்கான இழப்பீடு போதாது என்றும், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கு தொடர்ந்தனர். இதனால் பாலத்தின் கட்டுமானத்தில் தேக்கம் ஏற்பட்டது.அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு , நிலுவையில் இருந்த பணிகள் முடிக்கப்பட்டன. பால பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் இணைப்பு சாலை பணிகள் மட்டும் மீதமிருந்தன. இந்நிலையில் திருச்சிக்கு கடந்த 13ம் தேதி ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள முதல்வர் வரவிருந்த நிலையில் பாலம் திறக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபட்டது. எனினும் இணைப்பு சாலை பணிகளை திறக்க இயலாது என்பதால் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது மாம்பழச்சாலை மற்றும் திருவானைக்காவல் பகுதிகளில் தார்சாலை அமைக்கப்பட்டது. மேலும் சிறு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று திறக்கவிருந்த பாலம் வரும் 19ம் தேதிக்கு தள்ளிப்போடப்பட்டது. பணிகள் நிறைவடைந்து இந்த பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்சிங் முறையில் வரும் 19ம் தேதி திறந்து வைக்க உள்ளார். பாலத்தின் இருபுறமும் சேவைச்சாலை, ரவுண்டானாக்கள் அமைக்க வேண்டியுள்ளது. இந்த திருவானைக்காவல் மேம்பாலம் திறக்கப்பட இருப்பதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் திருவானைக்காவலுக்கு நேரடியாக செல்ல முடியாமல் சுற்றுச்சாலையில் சென்று வந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Thiruvananthapuram ,bridge , Trichy ,Thiruvanaikaval ,New Bridge , Cm Inaguration
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!