திறந்தபோது பழைய ஏசி இயந்திரம் பொருத்தியதால் திருச்சியில் காட்சிப்பொருளான ஏசி நிழற்குடை

*  பயன்படுத்த முடியாமல் பயணிகள் அவதி

திருச்சி, : திருச்சியில் பெயருக்கு பழைய ஏசி பொருத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட பயணிகள் நிழற்குடையில் ஏசிக்கள் இயங்காமல் காட்சி பொருளானதால் பயன்படுத்த முடியாமல் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகர பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் ஏசி வசதியுடன் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அப்படி அமைக்கப்படும் நிழற்குடைகளை, இதன் அருகாமையில் உள்ள ஏதாவது ஒரு நிறுவனம் அல்லது பெரிய கடைகளின் உரிமையாளர்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டு, இந்த நிழற்குடையை அமைத்து அவர்களே பராமரித்தனர்.

அதன்படி, திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் ஏசி வசதியுடன் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதில் 2 ஏசி பொறுத்தப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்த நிழற்குடை புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், அதில் உள்ள ஏசிக்கள் இயங்காததால் தற்போது இந்த நிழற்குடை காட்சி பொருளாக பொதுமக்களுக்கு பயனற்று கிடக்கிறது. கத்திரி வெயில் முடிந்தும் தமிழகத்தில் வெயில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைக்கிறது. இத்தகைய நிலையில் ஏசி இயங்காததால் நிழற்குடை உள்ளே ஒரு நிமிடம் கூட பொதுமக்கள் அமர முடியாது.

இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் ஏசி வசதி கொண்ட நிழற்குடை உள்ளே செல்லாமல் அருகில் உள்ள கடைகள் முன்பு நின்று பஸ்கள் வந்தவுடன் அதில் ஏறி பயணத்தை தொடர்கின்றனர். மாநகரை நவீனப்படுத்த மாநகராட்சி பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும், அவைகள் முழுமையாக நடைமுறையில் இருக்கிறதா என்பதை கண்டுகொள்வது கிடையாது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள 2 ஏசியும் மிக பழையதாக உள்ளது. இதை ஏன் அதிகாரிகள் கவனிக்கவில்லை.

இதன் ஆயுட்காலத்தை ஏன் கேட்டறியவில்லை. திறப்பு விழாவின்போது மட்டும் இயங்கினால் போதுமா? கணக்கிற்காகத்தான் இதுபோல் திறக்கப்படுகிறதா, என்றெல்லாம் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது. எனவே ஜோசப் கண் மருத்துவமனை முன்புறம் உள்ள குளிர் சாதன வசதி கொண்ட நிழற்குடையில் ஏசி மீண்டும் இயங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்ைக
விடுத்துள்ளனர்.

உள்ளே உட்கார முடியவில்லை...

சாதாரண நிழற்குடையாக இருந்தாலே போதும், அங்குள்ள சேர்களில் வயதானவர்கள், கர்ப்பிணிகள் பஸ்காக காத்திருக்கும் வரை அமர்ந்து பயனடைவார்கள். ஆனால் ஏசி என்று சொல்லி அனைத்து கதவுகளையும் மூடியிருப்பதால் வெயிலின் தாக்கத்தில் ஏசி இல்லாமல் உள்ளே உட்கார முடியவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் நிழற்குடை இருந்தும் பயணிகள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

× RELATED முகாம் சிறைவாசிகள் உண்ணாவிரதம் வாபஸ் ஏசி சமரசம்