×

17-வது நாடாளுமன்றத்தில் வாரணாசி தொகுதி எம்.பி.யாக பிரதமர் மோடி பதவியேற்பு: முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற வாய்ப்பு..!

டெல்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜ 2வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக, நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. அடுத்த மாதம் 26ம் தேதி நடைபெற உள்ள இதில், முத்தலாக் தடை மசோதா உட்பட 38  முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரம், பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன.  மக்களவை தேர்தலில் பாஜ 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. பாஜ தலைமையிலான தே.ஜ கூட்டணி மொத்தம் 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களிலும், இதன் தலைமையிலான  ஐ.மு. கூட்டணி மொத்தமாக 91 இடங்களிலும் வென்றன.

இதர கட்சிகளும், கூட்டணிகளும் 98 இடங்களை பிடித்தன. காங்கிரசுக்கு  மக்களவையின் மொத்த பலத்தில் 10 சதவீத இடங்கள் (55) கிடைக்காததால் இந்த முறையும் அதிகாரப்பூர்வமாக  எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாத நிலை உள்ளது. தேர்தல் வெற்றியை தொடர்ந்து, 57 மத்திய அமைச்சர்களுடன் கடந்த மாதம் 30ம் தேதி 2வது முறையாக பிரதமர் பதவியை நரேந்திர மோடி ஏற்றார். இந்த புதிய அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் (17வது மக்களவை) இன்று  தொடங்குகிறது. இது, அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடக்கிறது. முன்னதாக மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜ.வை சேர்ந்த மூத்த எம்பி வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர். முதலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியின் எம்.பி.யாக பதவியேற்றார். எம்.பி.யாக பதவியேற்ற மோடி மக்களவையில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 542 உறுப்பினர்கள் இடைக்கால சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றனர்.

Tags : Narendra Modi ,swearing-in ,constituency ,Varanasi ,Parliament , PM Modi sworn in as MP for Varanasi, 17th Parliament
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...