×

பெரியாறு முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? தரிசாக கிடக்குது 60 ஆயிரம் ஏக்கர்

*17 நாளாகியும் பருவமழை கைகொடுக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்

மதுரை : பெரியாறு முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 17 நாளாகியும் பருவமழை கைகொடுக்காமல் ஏமாற்றி வருவதால் 60 ஆயிரம் ஏக்கர் நெல் விளையும் பூமி தரிசாக கிடக்கிறது. பெரியாறு அணை பாசன இருபோக ஆயக்கட்டு தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 60 ஆயிரம் ஏக்கர் உள்ளது. இதன் முதல்போகத்திற்கு ஜூன் முதல் தேதி திறக்க வேண்டிய தண்ணீர் 17 நாளாகியும் இன்னும் திறக்க வாய்ப்பு கைகூடவில்லை.

 தேனி மாவட்டத்திலுள்ள 15 ஆயிரம் ஏக்கருக்கு திறக்க பெரியாறு அணையில் 2 ஆயிரம் மில்லியன் கனஅடிக்கு மேலும், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு திறக்க 4 ஆயிரம் மில்லியன் கனஅடிக்கு மேலும் தண்ணீர் இருப்பு தேவைப்படும். ஆனால் பெரியாறு அணை நீர் இருப்பு நேற்றைய நிலவரப்படி 1,271 மில்லியன் கனஅடி மட்டுமே உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும், பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை கண்ணாமூச்சி காட்டி ஏமாற்றி வருகிறது. இதனால் அணைக்கு 100 கனஅடி மட்டுமே நீர்வரத்து உள்ளது. அதே அளவுக்கு திறக்கப்படுகிறது. இதில் ஒரு சொட்டு கூட வைகை அணைக்கு வந்து சேரவில்லை. வைகை அணை நீர்மட்டம் 33 அடியாக சரிந்து குட்டை போல் காட்சி அளிக்கிறது.

முதல்போகத்திற்கு இந்த மாத இறுதிக்குள்ளாவது தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கிறார்கள். 60 ஆயிரம் ஏக்கர் நெல் விளையும் பூமி தரிசாக கிடக்கிறது. வைகை, குண்டாறும் வறண்டு கிடக்கிறது. கண்மாய்கள் காய்கின்றன. இதனால் கால்நடைகள் தண்ணீரை தேடி அலைகின்றன.

மழை வேண்டி தேக்கடியில் விவசாயிகள் பிரார்த்தனை

கூடலூர்: தேனி மாவட்டத்திலுள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் இருபோக சாகுபடி நிலங்கள் பெரியாறு அணை நீரை நம்பி உள்ளன. இந்த நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து முதல் போக விவசாயத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு பருவமழை ஏமாற்றி வருவதால் அணைக்கு எதிர்பார்த்த நீர்வரத்து இல்லை. தற்போது அணையிலிருந்து தமிழக பகுதி குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்போகத்திற்கு ஜூன் முதல் வாரம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் இன்னும் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், மழை வேண்டி சின்னமனூர் விவசாய சங்கம், நஞ்சை பட்டாதாரர் விவசாய சங்கம், நீரினை பயன்படுத்துவோர் சங்கம் (எண் 6) சார்பில் தேக்கடியிலுள்ள துர்க்கை அம்மன் கோயில் நேற்று பிரார்த்தனை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் ஷட்டர் பகுதியிலும் வருணபகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Tags : land , Agriculture ,water ,Periyaru Dam, rain
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!