×

ஒரு லாரி தண்ணீர் ரூ.7000: சென்னையின் முக்கிய இடங்களில் மேன்ஷன்கள் தற்காலிகமாக மூடல்

சென்னை: கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சில மேன்ஷன்கள் மூடப்பட்டு வருகிறது. கோடை மழை பொய்த்து போனதால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னையை பொறுத்தவரையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அளவிற்கு குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் முற்றிலும் வறண்டு போய் உள்ளதால் சென்னைக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் தொய்வு நிலவி வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் தண்ணீர் பற்றாக் குறையால் சென்னை சேப்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் உள்ள மேன்ஷன்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.

போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் 12,000 லிட்டர் அளவு கொண்ட லாரி தண்ணீரில் 7000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மேன்ஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். லாரியில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் ஒரே வாரத்தில் இரு மடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தண்ணீர் பிரச்சனையால் உணவகங்கள் மற்றும் ஐ.டி நிறுவனங்களையடுத்து மேன்ஷன்களும் மூடப்பட்டு வருவது சென்னை வாழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  



Tags : closure ,mansions ,areas ,Chennai , Larry Water, Chennai, Mansions, Closure
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...