×

கோவையில் தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி பலி..: சித்த வைத்தியரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்

கோவை: கோவையில் கல்லூரி மாணவிக்கு தவறான சிகிச்சையளித்த சித்த வைத்தியரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் புதூரில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேஷன் மற்றும் மல்லிகா தம்பதியினர். இவர்களது மகளான சத்தியப்பிரியா(20) கோவை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஓராண்டாக மாதவிடாய் பிரச்சனை இருந்ததன் காரணமாக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், அந்த சிகிச்சைகள் பலனளிக்காத காரணத்தால் அவரது உறவினர்களின் ஆலோசனைப்படி கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த குருநாதன் என்ற சித்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் சிகிச்சை பலனலிக்கவில்லை என்று தெரிகிறது. எனவே, சித்த வைத்தியர் தவறான சிகிச்சையளித்தாக கூறி மாணவியின் பெற்றோர் செல்வபுரம் காவல்நிலையத்தில் கடந்த மாதமே புகாரளித்துள்ளனர்.

ஆனால், புகாரின் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், மாணவி சத்தியப்பரியாவின் உடல் கடந்த வாரம் மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி சத்தியப்பிரியா இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சத்தியப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சம்பந்தப்பட்ட சித்த வைத்தியர் குருநாதனை கைது செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத செல்வபுரம் காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : College student , Coimbatore, therapist, college student, victim, Siddha doctor, relatives, road rage
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது