×

காரைக்குடி அருகே இருபிரிவினர் பயங்கர மோதல்- போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; 100 பேர் கைது

காரைக்குடி அருகே இருபிரிவினர் இடையே நேற்றிரவு பயங்கர மோதல் ஏற்பட்டது. கலவரத்தை தடுக்க சென்ற போலீசாரை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காரைக்குடியில் இரு பிரிவினர் இடையே மோதல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர் பகுதியில் இரு பிரிவினர் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று இரவு வசந்த மாளிகை பஸ் ஸ்டாப் பகுதியில் இருபிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென ஒரு தரப்பினர் கம்பு, உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கற்களை வீசியும் தாக்கியுள்ளனர்.இதையடுத்து மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களும் திரண்டு எதிர் தாக்குதலில் இறங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

போலீசாரை நோக்கி 2 பெட்ரோல் குண்டுகள் வீச்சு

அப்பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. சரமாரியாக கற்களை வீசியதில் வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. மேலும் அப்பகுதியில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார், டூவீலர்களை அடித்து நொறுக்கினர்.சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி அருண் தலைமையிலான போலீசார் விரைந்தனர். மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் எச்சரிக்கையை மீறி அவர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். மேலும் திடீரென ஒரு தரப்பினர் போலீசாரை நோக்கி 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர்.  இதில் போலீசாருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

10க்கும் மேற்பட்டோர் காயம் ; நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

அவர்கள் மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்து அமைதியை ஏற்படுத்தினர். இந்த மோதல் மற்றும் குண்டுவீச்சு சம்பவத்தால், திருச்சி-காரைக்குடி சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த மோதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிகிறது. அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக இரு பிரிவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை காரைக்குடி வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையம் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து பதற்றம் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Karaikudi , Karaikudi, collision, petrol, bomb, injury, arrest
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!