குஜராத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா கற்றுக் கொடுத்தார் நடிகை ஷில்பா ஷெட்டி

சூரத்: குஜராத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியின் போது பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்று ஆசனங்களைக் கற்றுக் கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது.

அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே ஆண்டு டெல்லியில் நடந்த பிரமாண்ட விழாவில் 191 நாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியும் பங்கேற்று யோகா செய்தார். இந்தநிலையில், வருகிற 21-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடக்க உள்ள யோகா தின கொண்டாட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.

இதற்கிடையே, யோகா தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதியில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்று அங்கிருந்தவர்களுக்கு பல்வேறு ஆசனங்களைக் கற்றுக் கொடுத்தார்.

நடிகை ஷில்பா ஷெட்டி:

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி யோகா ஆசிரியராக உள்ளார். மேலும், யோகா செய்யும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  லட்சக்கணக்கான சிடிக்கள் விற்பனையாகி ஷில்பா ஷெட்டிக்கு பெயரையும் புகழையும் கொடுத்தது. இதே போன்று யோகா செய்வது எப்படி? என்பது குறித்து அவர் எழுதிய புத்தகம் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்த்தன. இதையடுத்து யோகா தொடர்பாக ஷில்பா ஷெட்டி எழுதிய 2-வது புத்தகத்தின் வெளியீட்டு விழா கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Tags : Shilpa Shetty ,Yoga concert ,Gujarat , Gujarat, yoga show, yoga, actress Shilpa Shetty
× RELATED மனஅழுத்தம் தீர துப்புரவு பணியாளர்களுக்கு யோகா பயிற்சி