×

இந்திய வரலாற்றில் முதல்முறையாக முன்னாள் பிரதமர்கள் இல்லாத நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று கூடுகிறது..!

டெல்லி: டெல்லியில் இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாட்டின் வரலாற்றிலேயே முதன் முறையாக முன்னாள் பிரதமர்கள் யாரும் பங்கேற்காத சூழல் எழுந்துள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜ 2வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக, நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. அடுத்த மாதம் 26ம் தேதி நடைபெற உள்ள இதில், முத்தலாக் தடை மசோதா உட்பட 38  முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரம், பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன.  மக்களவை தேர்தலில் பாஜ 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

பாஜ தலைமையிலான தே.ஜ கூட்டணி மொத்தம் 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களிலும், இதன் தலைமையிலான  ஐ.மு. கூட்டணி மொத்தமாக 91 இடங்களிலும் வென்றன. இதர கட்சிகளும், கூட்டணிகளும் 98 இடங்களை பிடித்தன. காங்கிரசுக்கு  மக்களவையின் மொத்த பலத்தில் 10 சதவீத இடங்கள் (55) கிடைக்காததால் இந்த முறையும் அதிகாரப்பூர்வமாக  எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாத நிலை உள்ளது. தேர்தல் வெற்றியை தொடர்ந்து, 57 மத்திய அமைச்சர்களுடன் கடந்த மாதம் 30ம் தேதி 2வது முறையாக பிரதமர் பதவியை நரேந்திர மோடி ஏற்றார். இந்த புதிய அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் (17வது மக்களவை) இன்று  தொடங்குகிறது.

இது, அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடக்கிறது. இதில், மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜ.வை சேர்ந்த மூத்த எம்பி வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பி.க்கள் இன்றும்,  நாளையும் பதவி ஏற்கின்றனர். மக்களவைக்கான புதிய சபாநாயகர் 19ம் தேதி தேர்வு செய்யப்படுகிறார். அதன் பிறகு, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் வரும் 20ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த மாதம் 5ம் தேதி தாக்கல் செய்வார் என தெரிகிறது. அதற்கு முதல் நாள் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முத்தலாக் தடை மசோதா உட்பட, 38 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக  உள்ளது. அதே நேரம், முக்கிய பிரச்னைகளை கிளப்பவும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதனால், முதல் கூட்டத் தொடரிலேயே மக்களவை, மாநிலங்களவையில் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறவும், சட்ட மசோதாக்களுக்கு ஆதரவு கோரியும்,  ஐமு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி சமீபத்தில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாட்டின் வரலாற்றிலேயே முதன் முறையாக முன்னாள் பிரதமர்கள் யாரும் பங்கேற்காத சூழல் எழுந்துள்ளது.

கடந்த மக்களவையில் உறுப்பினராக இருந்த தேவகவுடா இந்த முறை தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அசாம் மாநிலத்தில் இருந்து தொடர்ந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்தது. கடந்த நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்க இருவரும் இந்த முறை பங்கேற்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்னாள் பிரதமர்கள் யாரும் இல்லாதது இந்திய வரலாற்றில் முதலாவது முறையாகும்.


Tags : India ,prime ministers ,session , History of India, Former Prime Minister, Parliamentary session
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...