×

பாஜ அரசு மீண்டும் பொறுப்பேற்றபின் முதன்முறையாக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

* முத்தலாக் உட்பட 38 மசோதாக்களை நிறைவேற்ற தீவிரம் * முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் மும்முரம்

புதுடெல்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜ 2வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக, நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. அடுத்த மாதம் 26ம் தேதி நடைபெற உள்ள இதில், முத்தலாக் தடை மசோதா உட்பட 38  முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரம், பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன.  மக்களவை தேர்தலில் பாஜ 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. பாஜ தலைமையிலான தே.ஜ கூட்டணி மொத்தம் 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களிலும், இதன் தலைமையிலான  ஐ.மு. கூட்டணி மொத்தமாக 91 இடங்களிலும் வென்றன. இதர கட்சிகளும், கூட்டணிகளும் 98 இடங்களை பிடித்தன. காங்கிரசுக்கு  மக்களவையின் மொத்த பலத்தில் 10 சதவீத இடங்கள் (55) கிடைக்காததால் இந்த முறையும் அதிகாரப்பூர்வமாக  எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாத நிலை உள்ளது. தேர்தல் வெற்றியை தொடர்ந்து, 57 மத்திய அமைச்சர்களுடன் கடந்த மாதம் 30ம் தேதி 2வது முறையாக பிரதமர் பதவியை நரேந்திர மோடி ஏற்றார். இந்த புதிய அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் (17வது மக்களவை) இன்று  தொடங்குகிறது. இது, அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடக்கிறது. இதில், மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜ.வை சேர்ந்த மூத்த எம்பி வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பி.க்கள் இன்றும்,  நாளையும் பதவி ஏற்கின்றனர். மக்களவைக்கான புதிய சபாநாயகர் 19ம் தேதி தேர்வு செய்யப்படுகிறார். அதன் பிறகு, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் வரும் 20ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த மாதம் 5ம் தேதி தாக்கல் செய்வார் என தெரிகிறது. அதற்கு முதல் நாள் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முத்தலாக் தடை மசோதா உட்பட, 38 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக  உள்ளது. அதே நேரம், முக்கிய பிரச்னைகளை கிளப்பவும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதனால், முதல் கூட்டத் தொடரிலேயே மக்களவை, மாநிலங்களவையில் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறவும், சட்ட மசோதாக்களுக்கு ஆதரவு கோரியும்,  ஐமு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி சமீபத்தில் சந்தித்து பேசினார்.
நாடாளுமன்ற கூட்டம் இன்று தொடங்குவதை முன்னிட்டு, பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்), தேசிய மாநாட்டு கட்சி  தலைவர் பருக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன், திமுக சார்பில் டி.ஆர்.பாலு மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய மோடி, ‘மக்களவையின் முதல் கூட்டத்தை புதிய எம்.பி.க்களுடன் உத்வேகத்துடனும், புதிய சிந்தையுடனும் தொடங்க வேண்டும். நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 16வது  மக்களவையில் எம்பி.க்கள் நடந்து கொண்ட விதத்தால், 2 ஆண்டுகள் வீணடிக்கப்பட்டது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் எம்பி.க்கள் செயல்படுகிறார்களா என்பதை அனைத்து கட்சி தலைவர்களும் எண்ணிப் பார்க்க  வேண்டும்’ என வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி.க்கள் கூட்டமும் நடைபெற்றது. அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு பேட்டியளித்த குலாம் நபி ஆசாத், ‘‘பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்க, அனைத்து கட்சி எம்பி.க்கள் கூட்டத்துக்கு வரும் 20ம் தேதி பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் மக்கள்  நலனுக்காக கொண்டு வரப்படும் மசோதாக்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்காது. விவசாயிகள் பிரச்னை, வேலை வாய்ப்பின்மை, வறட்சி ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். ஜனாதிபதி ஆட்சி நடைபெறும் ஜம்மு காஷ்மீரில், விரைவில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த வேண்டும். அங்கு  மக்களவை தேர்தல் நடத்தும்போது, சட்டப்பேரவை தேர்தலை ஏன் நடத்த முடியாது? ஆளுநர் மூலம் காஷ்மீரை நிர்வகிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புவதுபோல் தெரிகிறது. அதனால்தான், அங்கு சட்டப்பேரவை தேர்தல்  நடத்தப்படவில்லை’’ என்றார்.

மக்களவை, மாநிலங்களவையின் அனைத்து கட்சி எம்பி.க்கள் கூட்டத்தை வரும் 20ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் கூட்டியுள்ளார். இதில், எம்பி.க்கள் தங்கள் கருத்துகளை எந்த தடையும் இன்றி அரசுடன் பகிர்ந்து கொள்ளலாம். கட்சி  வேறுபாடின்றி அனைத்து எம்பி.க்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் நோக்கத்தில், புதிய முயற்சியாக இந்த கூட்டத்துக்கு மோடி ஏற்பாடு செய்துள்ளார். கூட்டத்துக்குப் பிறகு அனைவருக்கும் மோடி விருந்து கொடுக்கிறார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல்
மக்களவை தேர்தல் 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கிறது. ஆனால், மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் மாறி, மாறி வருவதால், தேர்தல் ஆணையத்துக்கு ஆண்டு முழுவதும் வேலை உள்ளது. மேலும், தேர்தலுக்காக பல ஆயிரம்  கோடி செலவிடப்படுகிறது. எனவே, தேர்தல் செலவைக் குறைக்கும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார். இது குறித்து வரும் 19ம் தேதி  ஆலோசிக்க, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 2022ம் ஆண்டில் இந்தியாவின் 75வது சுதந்திர தினவிழாவை கோலாகலமாக கொண்டாடுவது, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின விழாவை  விமரிசையாக கொண்டாடுவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

Tags : Parliament ,time ,government ,BJP , first time,BJP , Parliament,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்