×

மதுராந்தகம் சுற்றுவட்டாரத்தில் அனுமதி இன்றி இயங்கிய 5 பார்கள் மூடல்: மாவட்ட எஸ்.பி நடவடிக்கை

சென்னை: மதுராந்தகம் சுற்றுவட்டாரத்தில் அரசு அனுமதி இல்லாமல் இயங்கிய 5 மது பார்கள் இழுத்து மூடப்பட்டது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவர் தன்னிடம் போலீசார் அதிக பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும், அவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி அதுதொடர்பான வீடியோவை வெளியிட்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி, மாவட்டத்தில் இயங்கும் அனுமதி பெறாத பார்களை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டார். இதன்பேரில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அனுமதி பெறாத பார்கள் மூடப்பட்டன. இந்நிலையில் மதுராந்தகம் பகுதியில் படு அமர்க்களமாக செயல்பட்டு வந்த 3 பார்கள், மாம்பாக்கத்தில் 1 பார், கீழ் மருவத்தூரில் 1 பார் என அனைத்தும் மூடப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்த இந்த பார்கள் குறித்து பலமுறை காவல் துறையினருக்கு புகார் அளித்து இருந்தோம்.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இவைகள் அனைத்தும் மிக சுதந்திரமாக செயல்பட்டு வந்தன. நாங்களும் அரசு அனுமதியோடு இவைகள் செயல்படுவதாக நினைத்திருந்தோம். ஆனால் தற்போது தான் தெரிகிறது. அத்தனையும் அனுமதி பெற்று இயங்குவதை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்துள்ளன.இவ்வளவு நாட்களும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்துள்ளனர் என்பதும் தற்போது தான் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. இவை உள்ளூர் காவல் துறையினர் உதவியோடு ஒரு சிலரின் வருமானத்திற்காக நடந்த முழுக்க முழுக்க பொதுமக்களுக்கு எதிரான மிகப்பெரிய அத்துமீறல் என்றுதான் எண்ண தோன்றுகிறது. எனவே இவ்வளவு காலமாக அனுமதி இல்லாமல் மது பார்கள் நடத்தி வந்த ஆசாமிகளின் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.



Tags : 5 bars ,closed ,permission , Maduraantham , surroundings, District SP action
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...