×

தவணை தொகை தாமதித்தால் வீடு வாங்குவோர் மீது வட்டியை தாளிப்பதா?: தேசிய நுகர்வோர் கமிஷன் கண்டிப்பு

புதுடெல்லி: வீடு வாங்குவோர் வீட்டுக்கான தவணைத் தொகையை தாமதித்தால் அதிக வட்டி தாளிக்க கூடாது என்று தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஷன் கண்டித்துள்ளது.  டெல்லியை சேர்ந்த ஒருவர் குருகிராமத்தில் பல மாடிக்குடியிருப்பில் ஒரு பிளாட்டை வாங்கியுள்ளா–்ர். இது நடந்தது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால், தவணைத்தொகையை சில சமயம் தாமதித்ததால், பில்டர் ஆண்டுக்கு 18 சதவீத  வட்டி போட்டுள்ளார். அதையும் வேறு வழியின்றி கட்டியுள்ளார் இந்த வாடிக்கையாளர். நான்கு ஆண்டுக்கு பின்னும் வீட்டை கட்டி முடித்து ஒப்படைக்காததால் 83 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், பில்டர் தர மறுத்து  அதற்கும் தாமதித்துள்ளார்.  ‘நான் தவணைத் தொகை செலுத்தும் போது 18 சதவீத வட்டி அளிக்க வேண்டும் என்று சொன்னது போல, நீங்களும் எனக்கு என் பணத்துக்கு 18 சதவீத வட்டி  சேர்த்து தர வேண்டும்’ என்று பில்டருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கும்  பில்டர் எந்த பதிலும் சொல்லவில்லை.

  இதையடுத்து தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஷனில் வழக்கு ேபாட்டார். இதை விசாரித்த கமிஷன் தலைவர் நீதிபதி ஆர்.கே. அகர்வால், உறுப்பினர் ஷா ஆகியோர் தீர்ப்பில் கூறியதாவது:   பலமாடிக்குடியிருப்பு கட்டடத்தை கட்ட பிராஜக்ட் போடும் போது பில்டர் வங்கியில் கடன் வாங்குகிறார். அந்த பணத்துக்கு அவர் 1.5 அல்லது 2 சதவீதம் வரை தான் வட்டி செலுத்துகிறார். அதே சமயம், வாடிக்கையாளர், தவணைத்  தொகையை கட்ட தாமதித்தால் அவரிடம் 18 சதவீதம் வட்டி வசூலிப்பது சரியல்ல. பில்டர் செய்வது சட்டத்துக்கு புறம்பானது. எந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமும் இப்படி செய்ய கூடாது.  வீடு வாங்கும் வாடிக்கையாளருடன் ஒப்பந்தம்  போடும் போது, தங்களுக்கு வசதியான விதிகளை போட்டு, பில்டர்கள் கையெழுத்தை வாங்கி விடுகின்றனர். ஆனால், வாடிக்கையாளர்கள் என்ன செய்வார்கள்? சமமான முறையில் விதிகள் இருக்க வேண்டும். இந்த வகையில் பில்டர் செய்தது  தவறு.  தாங்கள் வங்கியில் வாங்கிய பணத்துக்கு வட்டியை மிகவும் குறைவாக,  வங்கி விதிப்படி கட்டி விட்டு, தன் வாடிக்கையாளரிடம் இருந்து மட்டும்  பல மடங்கு வட்டி வசூலிப்பது எந்த வகையிலும் ஏற்க  முடியாது.   இதனால், நாங்கள் வாடிக்கையாளருக்கு பில்டர் 18 சதவீத வட்டியுடன் சேர்த்து பணத்ைத திருப்பித்தர ேவண்டும் என்று கூறலாமா? அப்படி நாங்கள் செய்யவில்லை. வாடிக்கையாளருக்கு மொத்த பணத்தையும் 12 சதவீத வட்டியுடன் பில்டர்  திருப்பி தர வேண்டும். மேலும் அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாய் கூடுதலாக தர வேண்டும்.  இவ்வாறு கமிஷன் தலைவர் அகர்வால், உறுப்பினர் ஷா கூறியுள்ளனர்.




Tags : home buyers ,National Consumer Commission , installment , delayed,Home Buyers,National Consumers Commission strict
× RELATED குறைந்த விலையில் வீடு...