அரசு புறநகர் மருத்துவமனையில் தண்ணீரின்றி நோயாளிகள் அவதி

பெரம்பூர்: தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் அரசு புறநகர் மருத்துவமனை உள்ளது. இங்கு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தினசரி சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். பலர் உள் நோயாளியாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.  கடந்த சில நாட்களாக இந்த மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாட்டால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிப்பதற்கு மட்டுமின்றி கழிவறையிலும் தண்ணீர் இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். மருத்துவ சிகிச்சை மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, நோயாளிகள் நலன் கருதி குடிநீர் வாரிய அதிகாரிகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் இந்த மருத்துவமனைக்கு குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : hospital ,state , Patients suffering , water , government, suburban hospital
× RELATED காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை...