×

ஆவடி, அம்பத்தூர் பகுதியில் நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தங்கள்: பயணிகள் கடும் அவதி

ஆவடி: ஆவடி, அம்பத்தூர் பகுதியில் உள்ள பல பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகள் இல்லாததால் சுட்டெரிக்கும்  வெயிலில் நின்று பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். சென்னை புறநகர் பகுதியில் அம்பத்தூர், பாடி, அத்திப்பட்டு, கள்ளிக்குப்பம், புதூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை,  திருமுல்லைவாயில், ஆவடி, கோவில்பாதாகை, அண்ணனூர், பட்டாபிராம், மிட்டினமல்லி, முத்தாபுதுப்பேட்டை, திருநின்றவூர், பாக்கம்,  இடங்கள் உள்ளன. மேற்கண்ட பகுதிகளில் சி.டி.எச் சாலை, அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை, ஆவடி - பூந்தமல்லி சாலை, திருநின்றவூர் - பெரியபாளையம் சாலை, கொல்கத்தா நெடுஞ்சாலை, ஆவடி புதிய ராணுவ சாலை, பட்டாபிராம் - பூந்தமல்லி சாலை, திருநின்றவூர் - புதுச்சத்திரம் சாலை உள்ளிட்ட சாலைகள் உள்ளன. மேற்கண்ட சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டன. இதனை பயன்படுத்தி பயணிகள் பஸ் வரும் வரை காத்திருப்பார்கள். இந்த நிழற்குடைகள் மழை, வெயில் காலங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பாக இருந்தது.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல்வேறு நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, பல சாலைகளில் இருந்த நிழற்குடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன் பிறகு, ஒரு சில இடங்களில் தொகுதி எம்.எல்.ஏ நிதியின் கீழ் சிறிய நிழற்குடைகள் அமைக்கப்பட்டன. அந்த நிழற்குடைகளில் குறைவான பயணிகள் தான் நிற்கமுடியும். மேலும், முக்கிய பிரதான சாலைகளில் பல இடங்களிலும் நிழற்குடைகள் இன்று வரை அமைக்கப்படவில்லை. மேலும், பல நிழற்குடைகள் பராமரிப்பின்றி உடைந்து கிடக்கின்றன. இதனால், பயணிகள் வெயில், மழை காலங்களில் அவதிப்பட்டும், அச்சத்துடனும் சென்று வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அம்பத்தூர், ஆவடியில் உள்ள சூரப்பட்டு, கள்ளிக்குப்பம், புதூர், ஓரகடம், பாடி பிரிட்டானியா, யாதவர் தெரு, மண்ணூர்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகம், டீச்சர்ஸ் காலனி, அம்பத்தூர் சிங்கப்பூர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஸ்டெட்போர்டு ஆஸ்பத்திரி, திருமுல்லைவாயில், ஆவடி செக்போஸ்ட், கவரபாளையம், இந்து கல்லூரி, பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர் ஜெயா கல்லூரி, திருநின்றவூர் மேம்பாலம், திருநின்றவூர் பஜார், இந்தியன் வங்கி  ஆகிய இடங்களில் உள்ள பஸ்  நிழற்குடைகள் இல்லை. இதோடு மட்டுமல்லாமல், புறநகர் பகுதியில் மினி பேருந்து செல்லும் உட்புற சாலைகளிலும் பேருந்து நிறுத்தங்களிலும் நிழற்குடைகள் அறவே இல்லை. தற்போது, கோடையில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக, மேற்கண்ட பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில் கொடுமையால் தினமும் அவதிப்பட்டு பயணிக்கின்றனர். மேலும், முதியோர்கள், பெண்கள், சிறுவர்கள் வெயில் கொடுமை தாங்க முடியாமல் மயங்கி கீழே விழுகின்றனர். மேலும், மழைக்காலங்களில் நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தங்களில் பயணிகள் இன்னலடைகின்றனர் என்றனர்.

Tags : Bus stops ,Avadi ,Ambattur ,Passengers , Bus stops, Avadi, Ambattur:
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...