×

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: வேலூரிலும் வாக்குப்பதிவு

சென்னை: காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதாகவும், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூரிலும் தேர்தல் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த எச்.வசந்தகுமார் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தனது எம்.எல்.ஏ பதவியை  ராஜினாமா செய்தார். இதனால் நாங்குநேரி தொகுதியை தேர்தல் ஆணையம் காலியான தொகுதியாக அறிவித்தது.இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி கடந்த சில தினங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதியும் தற்போது காலியானது.ஒரு தொகுதி காலியானால் அதில் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். எனவே காலியாக உள்ள இந்த இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதியையும் சேர்த்து வரும்  செப்டம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 63,757 வாக்குகளையும், அதிமுக 56,845, பா.ம.க 41,428 வாக்குகளும் பெற்றன. இதேபோல் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் திமுக 83,432  வாக்குகள் பெற்றது. ஆனால் அதிமுக கூட்டணி 74,819 வாக்குகளை மட்டுமே பெற்றது. எனவே இந்த தொகுதியில் திமுகவிற்கே அதிக செல்வாக்கு இருப்பது உறுதியாகியுள்ளது.இதேபோல் நாங்குநேரி தொகுதியில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக 51,596 வாக்குகளை பெற்றது. ஆனால், திமுகவோ 86,306 வாக்குகளை பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.எனவே நாங்குநேரி தொகுதியிலும் திமுகவிற்கே வெற்றி என்பது பிரகாசமாக தெரியவந்துள்ளது.இதற்கிடையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளிலும் தோல்வியடைந்து விட்டதால் அதிமுக தலைமை எப்படியாவது வர  உள்ள இடைத்தேர்தலிலும், வேலூர் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்று வேட்பாளர்களை தயார் செய்து வருகிறது.

இதற்காக மூன்று தொகுதிகளிலும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே, பிரசாரத்தை தொடங்க உள்ளதாகவும், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அமைச்சர்கள் தங்களின் ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு அதிமுக  தலைமையிடம் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வரும் என்றும் தெரியவருகிறது.இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதியையும் சேர்த்து வரும் செப்டம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Nanguneri ,constituencies ,polling ,Vikramvandi ,Vellore , Nanguneri ,Vikramvandi, constituencies,Vellore polling
× RELATED நாங்குநேரி அருகே இன்று 6ம் வகுப்பு...