×

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்

* அரசு, அதிகாரிகளுக்கு மக்கள் எச்சரிக்கை
* தரமற்ற தண்ணீரால் நோய் பரவும் ஆபத்து

சென்னை: பருவ மழையின் ஏமாற்றம், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டதால்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் கிடைக்க தேவையான  ஏற்பாடுகளை செய்யாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று மூன்று மாவட்ட மக்களும் அறிவித்துள்ளனர். மெட்ரோ வாட்டர், பொதுக்குழாய் என எதிலும் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். பலர் விவசாய கிணற்று தண்ணீரை காய்ச்சி குடிக்கின்றனர். சிலர் அப்படியே குடித்து மஞ்சள் காமலை உள்பட தண்ணீரால் கோடைக்காலங்களில்  வரும் நோய்களால் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் அதை கண்டுகொள்வதாக தெரியவில்லை. மக்களும் தங்களின் குடிநீர் தேவை மற்றும் அன்றாட குளியல், துணி துவைத்தல், சமைத்தல் போன்ற பணிகளுக்கு இந்த  மாசுபட்ட நீரை பயன்படுத்தினால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டியதுதான். தண்ணீர் பிரச்னை போய் அப்புறம் மருத்துவமனைக்கு மக்கள் படையெடுக்கும் சூழல் ஏற்படும் நிலை உள்ளது. எனினும் அதை இப்போதைக்கு பெரிதாக  எடுத்துக் கொள்ளாத மக்கள் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனாலும் அந்த தண்ணீரும் கிடைக்காமல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட மக்கள் படும்பாடு சொல்லிமாளாது.

பெரம்பூர் சென்னை பெரம்பூர் லோகோ பகுதியில் பாலவாயல் தெரு, மூர்த்தி தெரு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தெருக்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் டேங்கர் லாரி மூலம் குடிநீர்  விநியோகிக்கப்பட்டு வந்தது. அதுவும் சரிவர வழங்கப்படவில்லை. ஒரு குடம் தண்ணீர் 10 மற்றும் 15 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த தண்ணீரும் கிடைப்பதில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “குடிநீர் கிடைக்காமல் தினமும் அவதிப்படுகிறோம். பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகளும் அரசும் கண்டுகொள்ளவில்லை. போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.  உடனே தீர்வுகாணாவிட்டால் தண்ணீருக்காக மிகப்பெரிய போராட்டம் சென்னையில் வெடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மக்கள் கூறினர். இதுபோல, வடசென்னை பகுதிகளான  திருவிக நகர், கொடுங்கையூர், வியாசர்பாடி,  புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, ராயபுரம் மற்றும் காசிமேடு பகுதியில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

நகரில் குடிநீருக்காக 2 கி.மீட்டர் நடைபயணம்வில்லிவாக்கம் நியூ  ஆவடி ரோடு சாலையில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதி  மக்களுக்கு சரிவர குடிநீர் கிடைக்காததால் சுமார் 2 கி.மீ. சென்று தண்ணீர்  பிடித்து வருகின்றனர். இதுகுறித்து,  குடிநீர்வாரியம் 95வது வார்டு  உதவி செயற்பொறியாளர் விஜயராகவனிடம அப்பகுதி  மக்கள் புகார் கொடுத்தனர். அதற்கு உதவி செயற்பொறியாளர் விஜயராகவன், ‘‘உங்கள் பகுதியில் குடிநீர் தரமாட்டோம் என்கிறார். குடிநீர் தொட்டி கேட்டு 2 வருடமாக போராடி வருகிறோம். ஆனால் எந்த  அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை. எனவே, தண்ணீர் தொட்டி  அமைத்து தராவிட்டால்  சாலை மறியல், மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். உதவி செயற்பொறியாளர் விஜயராகனை இடமாற்றம்  செய்யவேண்டும்’ என்றனர்.
திருக்கழுக்குன்றம்திருக்கழுக்குன்றம் ஒன்றியம் ஆயப்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய பெரிய காலனி,  ராஜாதெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். கடந்த 3 மாதமாக  குடிநீர் கிடைக்காததால்  மக்கள் வயல்வெளி பம்பு செட் மற்றும் கிணறுகளுக்குச் சென்று சுத்திகரிக்கப்படாத தண்ணீரை எடுத்து வந்து குடிக்க பயன்படுத்துகின்றனர். இதனால் நோய் பரவும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் 100க்கும் மேற்பட்டோர்  திருக்கழுக்குன்றம் பிடிஓவை சந்தித்து உடனடியாக குடிநீர்  பிரச்னையை தீர்க்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஆயப்பாக்கம் ஊராட்சி பாலாற்றை ஒட்டியுள்ள ஊராட்சி. இந்த  ஊராட்சியிலேயே இப்படிப்பட்ட கடுமையான குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. இதை தீர்க்க நாங்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் எங்கள் கிராம பாலாற்றில் குடிநீருக்காக  கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தண்ணீரும் உள்ளது. ஆனால், அந்த தண்ணீரை முறையாக பைப் லைன் மூலம் கொண்டு வந்து பொதுமக்களுக்கு வினியோகிக்கக் கூட திராணியில்லாதவர்களாக அதிகாரிகள் உள்ளனர். இதேநிலை  நீடித்தால் நாங்கள் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று ஆவேசத்துடன் கூறினர்.

ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை அருகே பால்ரெட்டி கண்டிகை  கிராமத்தில்  200க்கும் மேற்பட்ட குடும்பங்களை 1000க்கும் மேற்பட்ட  மக்கள்  வசிக்கிறார்கள். தற்போது, நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததன்  காரணமாக ஒரு மாதமாக சரிவர தண்ணீர்  வரவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள்  குடிதண்ணீர் எடுப்பதற்கு இரண்டு கி.மீ. தூரமுள்ள வயல் வெளிக்கு செல்கிறார்கள்.  நில உரிமையாளர்கள் தங்களது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சாமல்  மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர்  வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பால்ரெட்டி  கண்டிகை கிராமத்தில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து விட்டதால் கடந்த ஒரு  மாதமாக குடிநீர் வரவில்லை. 2015ம் ஆண்டு கிராமத்தின் அருகே அரசு மணல்  குவாரி நடத்தப்பட்டதால்  நிலத்தடி நீர் மட்டம் குறைந்து சுற்று வட்டாரத்தில்  உள்ள விவசாய நிலங்களில் உள்ள  பைப்புகளிலும் தண்ணீரின் அளவு குறைந்து தான்  வருகிறது. இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே அந்த தண்ணீரும் வரும் என  தெரிகிறது. இந்நிலை  நீடித்தால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.



Tags : struggle ,Kanchipuram ,Chennai ,Tiruvallur ,districts , districts, Chennai, Kanchipuram ,Tiruvallur
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...