×

பி.இ., பி.டெக். படிப்புக்கான தரவரிசை பட்டியல் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: பிஇ, பிடெக் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் இன்று வெளியிடுவதாக இருந்த நிலையில், 20ம் தேதி வெளியிடப்படும்.கவுன்சலிங் தொடங்குவது 25ம் தேதிக்கு ஒத்திப்போகும் என்று தெரிகிறது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியானது. மே 2ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு தொடங்கி 31ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து, ஜூன் 7ம் தேதி சான்று சரிபார்ப்பு நிகழ்வு  தமிழகத்தில் 46 மையங்களில் நடத்தப்பட்டது.  இன்று தொடங்க தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று ஏற்கனவே தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான பணிகள் முடியாத நிலையில் இன்று வெளியாக  இருந்த தரவரிசைப் பட்டியல் 20ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தர்மபுரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  கடந்த  மே மாதம் 2ம் தேதி தொடங்கிய பொறியியல்  சேர்க்கைக்கு ஆன்லைன் முறையில்  விண்ணப்பிக்கும் பணிகள், அம்மாதம் 31ம் தேதி வரை நடந்தது. இதற்கான  சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) ஜூன் 3ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகத்தில்  உள்ள 46 சேவை மையங்கள் மூலம் ஜூன்  7ம் தேதி முதல் 13ம் தேதி வரை சான்றிதழ்  சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பொறியியல் சேர்க்கைக்கு 1  லட்சத்து 33 ஆயிரத்து 166 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 1 லட்சத்து 4  ஆயிரத்து 418 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளில் பங்கேற்றனர். இது, 78.4  சதவீதம். கடந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர 1 லட்சத்து  59 ஆயிரம் பேர்  பதிவு செய்து, 98 ஆயிரம் பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டனர்.  இது 61.6 சதவீதம். நடப்பு கல்வியாண்டுக்கான சான்றிதழ்  சரிப்பார்ப்பு பணிகள் நிறைவு பெற்று,  17ம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி தர வரிசை  பட்டியல் வெளியிடுவது 20ம் தேதிக்கு  தள்ளிவைக்கப்படுகிறது. சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட மாணவர்களில் பலர் குறித்த நேரத்தில் கலந்து ெகாள்ள முடியாத நிலை,  சான்றிதழ்களை  உடனடியாக சமர்ப்பிக்க இயலாத நிலையிலும் சிலர் இருந்தனர். அதனால் அவர்களால்  சான்று சரிபார்ப்பில் பங்கேற்க முடியவில்லை. அதனால்  அந்த வகை மாணவர்களுக்கு  மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளோம்.  இந்த  இடைவெளியில்  பிரச்னைகளை சரிசெய்து, அவர்களது பெயரையும் தரவரிசை பட்டியலில்   இடம்பெறச் செய்யும் வகையில் இந்த அவகாசம் வழங்கப்படும். ஜூன் 20ம்  தேதி வெளியிடப்படும் தரவரிசை பட்டியலை இணைய தளத்தில் 4 நாட்கள் மாணவர்கள் பார்வையிடலாம். இந்த பட்டியலில் குறைகள் இருந்தாலும்,  சந்தேகங்கள்  ஏற்பட்டாலும், சென்னை தொலைபேசி 044-22351014, 22351015 ஆகிய  எண்களில்  தொடர்பு கொண்டு அவற்றை மாணவர்கள் சரிசெய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.




Tags : B.Tech , B.E., B.Tech.,study, Ranking ,20th
× RELATED பி.இ., பி.டெக் படிப்புகான துணை கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு