×

முதல்வர் எடப்பாடி சென்னை திரும்பினார் பிரதமர் மோடி, அமித்ஷாவை தனித்தனியாக சந்தித்து பேச்சு: அதிமுகவில் பரபரப்பு

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை திரும்பினார். அவர், பிரதமர் மோடி, அமித்ஷாவை தனித்தனியாக சந்தித்து பேசியது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டங்கள் மற்றும் அரசின் கொள்கைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை அளிக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியிடம் தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அளித்த ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும் என்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். ெதாடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும் அவரிடம் பேசியதாக கூறப்படுகிறது. அதே போன்று அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை பிரச்னையில் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், பல்வேறு திட்ட பணிகளுக்கும், தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று எடப்பாடி கோரிக்கை விடுத்தார். நீர்வளத்துறை அமைச்சரிடம் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க க்கூடாது என்றும் கோரிக்கை வைத்தார். பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டம் முடிந்த பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக பேசியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவில் உட்கட்சி பிரச்னையில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். மேலும், மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுகவுக்கு ஒரு அமைச்சர் பதவி தர வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ராஜ்ய சபா எம்பி பதவி காலியாகவுள்ள நிலையில், அதில் யாரை நியமிப்பது என்பது தொடர்பாக அவருடன் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இருந்து நேற்று காலை புறப்பட்டார். காலை 10 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தடைந்தார். முதல்வர் எடப்பாடியுடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதல்வர் தனிப்பிரிவு செயலாளர்கள் டெல்லி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுகவுக்கு ஒரு அமைச்சர் பதவி தர வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.



Tags : Modi ,Amit Shah ,Chennai , Chief Minister,Modi, visits, Amit Shah ,Chennai
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...